பாமக கடைசி நேரத்தில் கைவிட்டதால் கடும் விரக்தி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4+1: தொகுதிகள் பட்டியலை இன்று எடப்பாடி வெளியிடுகிறார்

சென்னை: பாமக கடைசி நேரத்தில் பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டதால், அதிமுக கூட்டணியில் இழுபறியாக இருந்த தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்க எடப்பாடி சம்மதித்துள்ளார். இன்று கூட்டணிக்கான தொகுதிகளை அவர் வெளியிடுகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (20ம் தேதி) தொடங்குகிறது. இந்தநிலையில், அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று நேற்று முன்தினம் மதியம் வரை கூறப்பட்டது. அதன்படி பாமகவுக்கு 7 தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியது. ஆனால், எதிர்பாராத நிலையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜ கூட்டணியில்தான் பாமக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக தலைவர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.

கூட்டணியில் பெரிய கட்சி என்றால் அது பாமகவாகத்தான் இருக்கும் என்றும், வடமாவட்டங்களில் பாமகவுக்கு ஓட்டு உள்ளதால் ஒரு கவுரவமான வாக்கை வாங்க முடியும் என்று அதிமுக தலைவர்கள் கருதினர். ஆனால், அவர்களின் ஆசை நிராசையாகி விட்டது. இந்நிலையில் அதிமுக தலைமையுடன் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக தரப்பில் 7 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்கப்பட்டது. ஆனால், பாமகவுக்கு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க முடிவு எடுத்ததால் தேமுதிகவுக்கு 3 மக்களவை தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியது. இதனால், தேமுதிகவும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு, 40 தொகுதிகளிலும் விருப்ப மனு வாங்கி வருகிறது. ஆனாலும், தேமுதிகவினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து கூட்டணி குறித்து ஒப்பந்தம் செய்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பாமக சென்று விட்டதால், தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். இதனால் தேமுதிகவுக்கு 4 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க எடப்பாடி பழனிச்சாமி முன் வந்தார். ஆனால் தேமுதிகவோ 5 மக்களவை கேட்டது. கடைசியில் 4 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிக்கு நேற்று இரவு சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோருடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அதிமுக சார்பில் இன்று (20ம் தேதி) கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார். அதேநேரத்தில், அதிமுக வேட்பாளர் பட்டியலையும் இன்று வெளியிடலாமா என்றும் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளிடம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

 

The post பாமக கடைசி நேரத்தில் கைவிட்டதால் கடும் விரக்தி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4+1: தொகுதிகள் பட்டியலை இன்று எடப்பாடி வெளியிடுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: