டெல்லி முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி அரசின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்க துறை அதிகாரிகளால் கடந்த 2022ம் ஆண்டு மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்ற விசாரணை காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இருப்பினும் வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு சத்யேந்தர் ஜெயின் தொடர்ந்த மனுக்கள் அனைத்தையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சத்யேந்தர் ஜெயின் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் உடல்நலத்தை அடிப்படையாக கொண்டு அவருக்கு கடந்த மே மாதம் நிபந்தனையுடன் கூடிய மருத்துவ இடைக்கால ஜாமீன் வழங்கியது. அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘இந்த விவகாரத்தில் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க முகாந்திரம் இல்லை என்பதால், அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர்.

The post டெல்லி முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: