மகளிர் பிரிமியர் லீக் டி20 ஆர்சிபி அணி சாம்பியன்: பைனலில் டெல்லியை வீழ்த்தியது

புதுடெல்லி: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நேற்று மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்தது. கேப்டன் லான்னிங், ஷபாலி இணைந்து இன்னிங்சை தொடங்கினர். அதிரடியில் இறங்கிய ஷபாலி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட,கேப்பிடல்ஸ் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

லான்னிங் – ஷபாலி ஜோடி 7 ஓவரில் 64 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. டெல்லி மிகப் பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸி. ஸ்பின்னர் சோபி மோலினியூக்ஸ் வீசிய 8வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சித்த ஷபாலி எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றிருந்த ஜார்ஜியா வேர்ஹம் வசம் பிடிபட்டார். அவர் 44 ரன் எடுத்து (27 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேற, அதே ஓவரின் 3வது மற்றும் 4வது பந்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்சி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

விக்கெட் இழப்பின்று 64 ரன் என்ற வலுவான நிலையில் இருந்த டெல்லி அணி 64/3 என திடீர் சரிவை சந்தித்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே லான்னிங் 23 ரன் எடுத்து ஷ்ரேயங்கா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க… டெல்லி கேப்பிடல்ஸ் 18.3 ஓவரில் 113 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஆர்சிபி பந்துவீச்சில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4, சோபி மோலினியூக்ஸ் 3, ஆஷா சோபனா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. எல்லிஸ் பெர்ரி 35 ரன், சோபி டிவைன் 32, கேப்டன் மந்தனா 31 ரன் விளாசினர். சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு முதல் பரிசாக ரூ.6 கோடி, டெல்லி அணிக்கு 2வது பரிசாக ரூ.3 கோடி வழங்கப்பட்டது. டெல்லியுடன் 5 முறை மோதியதில், ஆர்சிபி முதல் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மகளிர் பிரிமியர் லீக் டி20 ஆர்சிபி அணி சாம்பியன்: பைனலில் டெல்லியை வீழ்த்தியது appeared first on Dinakaran.

Related Stories: