மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

திருமலை: மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகன், சந்திரபாபு உள்ளனர் என்று விசாகப்பட்டினம் காங்கிரஸ் மாநாட்டில் தெலங்கானா முதல்வர் பேசினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்போராட்ட மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. கட்சியின் மாநில தலைவர் ஷர்மிளா தலைமையில் நடந்த மாநாட்டில் தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி பங்கேற்று பேசியதாவது: ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு இருவரும் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

ஆந்திராவின் சுயமரியாதையை டெல்லியில் பணயம் வைத்துள்ளனர். கேள்வி கேட்கும் தலைவர்கள் இல்லாததால் ஆந்திராவை பிரதமர் மோடி கவனிக்கவில்லை. விசாகாப்பட்டினம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. டெல்லியில் இருந்து யார் வந்தாலும் விசாகப்பட்டினம் உருக்காலையை அரசாங்கத்தின் எல்லையில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது.

உருக்காலையை காப்பாற்றவும் ஆந்திரா உரிமையை காக்கவும் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா இப்போது முன் வந்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து போராடி விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாரிடம் விற்பதை தடுத்து காப்பாற்றுவோம். ஆந்திராவிற்கு கேள்வி கேட்கும் தலைவர்கள் வேண்டும். ஆட்சி செய்யும் தலைவர்கள் அல்ல.

மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர், ராகுல்காந்தியை பிரதமராக்குவதே லட்சியமாக கொண்டிருந்தார். ஆந்திராவில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சிறப்பு அந்தஸ்து, போலவரம் திட்டம், தலைநகர் மூலதனம் குறித்து மத்திய அரசை கேள்வி கேட்கவில்லை. ஜெகன்மோகன் தேர்தலுக்கான முன்னேற்பாடாக சித்தம் மாநாட்டிற்கு ரூ.600 கோடி செலவிட்டுள்ளார் இவ்வாறு அவர் பேசினார்.

The post மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: