ஒருசில மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்துவது ஏன்?: திருமாவளவன் எம்பி காரசார கேள்வி

மீனாம்பாக்கம்: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்ற மாலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயண நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 9.40 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக மும்பைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, அவர் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகளால் தற்போதுதான் தேர்தல் தேதிகளை தாமதமாக அறிவித்துள்ளது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 3 நாள்தான் இடைவெளி உள்ளது. மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களில் 7, 5 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுவை சேர்த்து மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஏதோ அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே சுமார் 45 நாட்கள் கால இடைவெளி உள்ளது. இவ்வளவு இடைவெளி ஏன்? நாடு முழுவதும் 3 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க முடியும். கடந்த காலங்களில் நாடு முழுவதும் ஒரே நாளில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம். அதற்கான உள்கட்டமைப்புகளும் இங்கு உள்ளன. நாங்கள் மக்களை நம்பி களமிறங்குகிறோம். அனைத்து மக்களும் 100 சதவீத வாக்குப்பதிவு செய்வது அவசியம்.

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஒருசில மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்துவது ஏன்?: திருமாவளவன் எம்பி காரசார கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: