மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு பகுதி திருமூர்த்தி அணையை தூர் வார கோரிக்கை

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது.பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணைதான் பிஏபி தொகுப்பு அணைகளின் தாய் என அழைக்கப்படுகிறது.இங்கிருந்து பரம்பிக்குளம், பெருவாரிபள்ளம், தூணக்கடவு அணைகள் வழியாக சர்க்கார்பதி மின்நிலையத்துக்கு செல்லும் தண்ணீர், காண்டூர் கால்வாய் வழியாக சுமார் 45 கிமீ தூரம் பயணித்து திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.இதுதவிர, மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வழியாக திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.

60 அடி உயரம் கொண்ட இந்த அணை 1967ம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் உடுமலை நகராட்சி பகுதிக்கும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அணையின் நீர்மட்ட கொள்ளளவு ஒன்றரை டிஎம்சிதான் என்றாலும், ஆண்டுக்கு பத்து மாதங்கள் வரை தொடர்ச்சியாக தண்ணீர் பெறப்பட்டு, பிஏபி பாசனத்தில் அதிகபட்சமாக 4 லட்சம் ஏக்கர் வரை பயன்பெறுகிறது.

அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒருமுறைகூட தூர் வாரப்படவில்லை. இதனால் அணையின் கிழக்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் அதிகளவு வண்டல் மண் குவிந்து காணப்படுகிறது. பாலாறு மூலமும், கான்டூர் கால்வாய் மூலமும் அடித்துவரப்படும் வண்டல் மண் அணையில் சேர்ந்து கிடக்கிறது.கடந்த அதிமுக ஆட்சியின் போது, அணை, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்து இலவசமாக விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்பேரில், திருமூர்த்தி அணையின் தெற்கு பகுதியில் அதிகளவு விவசாயிகள் வண்டல் மண் தோண்டி எடுத்தனர். அதுவும் கரையோரப்பகுதியில் மட்டும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிக ஆழத்தில் தோண்டி எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.அணையின் உள்பகுதியிலும் பரவலாக மண் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது தண்ணீர் குறைந்த நிலையில் மைதானம் போல் அணை காணப்படுகிறது.அணையின் கிழக்கு பகுதி மண் மேடாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் தூர் வாரினால் அதிக தண்ணீர் சேமிக்க முடியும்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:லட்சக்கணக்கான பாசன பரப்புக்கும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாக விளங்கும் திருமூர்த்தி அணையில் பெரும் பகுதி மணல் மேடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக, கிழக்கு பகுதியில் அதிகளவு மண் காணப்படுகிறது. இங்கு தூர்வாரினால் கூடுதலாக அரை டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம். இதனால் அருகில் உள்ள ஜல்லிபட்டி, கொங்குரார் குட்டை கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்கும்.

கோடை காலங்களில் அமராவதி அணை வறண்டு விடுவதால், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூடப்பட்டு கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. அந்த சமயங்களில் திருமூர்த்தி அணையில் இருந்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் இந்த அணையில் இருந்து புதிய புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. எனவே, தண்ணீர் ஸ்டோரேஜ் அளவை அதிகரிப்பது அவசியமாகும். அரசே தூர் வாராவிட்டாலும் கூட, முன்பு அனுமதித்தது போல விவசாயிகளே இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கலாம்.

கிழக்கு பகுதியில் 5 முதல் 7 அடி ஆழத்துக்கு பரவலாக மண் எடுத்தால் கூடுதல் தண்ணீர் சேமிக்க முடியும். இதனால் கோடை காலங்களில் நகர பகுதி மட்டுமின்றி அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர் விநியோகிக்க முடியும். விவசாயிகளும் பயன்பெறுவர். உரிய ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அமராவதி அணையை தூர்வாருவதற்கான மண் ஆய்வு நடத்தப்பட்டு, கிடப்பில் உள்ளது. திருமூர்த்தி அணையையாவது விவசாயிகள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு பகுதி திருமூர்த்தி அணையை தூர் வார கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: