சென்னை முழுவதும் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை, மார்ச் 17: இந்திய தேர்தல் ஆணையத்தால் 18வது நாடாளுமன்ற தேர்தல்-2024, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னை, தென்சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ல் நடக்கிறது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து, தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ள 16 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 16 பறக்கும் படை குழுக்கள், 16 வீடியோ கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்களை பார்வையிட்டு, அவர்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர், தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்திற்கான 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனுக்கள், வரும் 20ம் முதல் 27ம் தேதி வரை 8 நாட்கள் வரை வழங்கப்படும்.  சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வடக்கு வட்டார துணை ஆணையர், சென்னை மாநகராட்சி, எண்.62, பேசின் பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ தெற்கு வட்டார துணை ஆணையர், சென்னை மாநகராட்சி, எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை மத்தியம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மத்திய வட்டார துணை ஆணையாளர், சென்னை மாநகராட்சி, எண்.36பி, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர் ஆகிய அலுவலகங்களில் (அரசு விடுமுறை நாட்களை தவிர) தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான 3,719 வாக்குச்சாவடிகளும், 944 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன. இவற்றில் 579 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஏதுமில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேற்கண்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நாளின்போது, வாக்குப்பதிவுக்கான பொருட்களை வழங்குவதற்காக 16 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்ந்தார்போல் 299 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்டல குழுக்களில் ஒரு மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். இவர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் இதர வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவார்.

சுவர் விளம்பரங்கள் அகற்றல் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் 24 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும். பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் 48 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும். தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்கள் 72 மணிநேரத்திற்குள் அழிக்கப்படும். தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 16,363 அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியில் ஈடுபட உள்ளனர். பறக்கும் படை குழுவினர், காணொலி கண்காணிப்பு குழு மற்றும் நிலைக் கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கு தனித்தனியாக வாகன வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, மேற்கண்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, மேற்படி குழுவினரின் பணிகள் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடைமுறை மற்றும் நடத்தை நெறிமுறை பணிகளை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு பணிக்கும் மாவட்ட அளவில் கண்காணிப்பாளர்/ செயற்பொறியாளர்/ உதவி வருவாய் அலுவலர்/ துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைக் குழு, நிலைக் கண்காணிப்புக் குழு, காணொளி கண்காணிப்புக் குழு, உதவி தணிக்கைக் குழு மற்றும் மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் கருவி ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள பொது இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுப்பாட்டு அறை
சென்னை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொதுமக்களுக்காக 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 15.03.2024 அன்று முதல் இயங்கி வருகிறது. எனவே, பொதுமக்கள் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைகளில் செயல்படும் இலவச தொலைபேசி அழைப்பு எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

செல்போன் செயலி வெளியீடு
C-Vigil என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு குடிமகனும் தங்கள் பகுதியில் தேர்தல் காலங்களில் ஏற்படும் விதிமுறை மீறல்கள் குறித்த புகார்களை இந்தச் செயலி மூலம் அளிக்கலாம். புகாரின் விவரங்கள் புகைப்படம், காணொளி காட்சி மற்றும் மீறல் நடைபெறும் இடம் உடனடியாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். மேற்படி புகாரினை சம்பந்தப்பட்ட தொகுதி பறக்கும் படைக் குழுவினருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இந்தச் செயலியை Google Play Storeல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொதுக்கூட்டம், அலுவலகம்
ஊர்வலங்களுக்கு அனுமதி
வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் போன்ற ஆறு வகையான இனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் “Suvidha” என்ற இணையதள வாயிலான அனுமதி பெறும் நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தின் முகவரி https://suvidha.eci.gov.in ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த இணையத்தின் வாயிலாக அனுமதி பெற, நிகழ்விற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதைத்தவிர வேட்பாளர்கள் கட்டடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி வழங்க அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை முழுவதும் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பு குழுக்கள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: