வாஸ்குலர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து அசத்தல்; 5 மணி நேரம் போராடி பச்சிளம் குழந்தை கையை மீட்ட நெல்லை அரசு டாக்டர்கள்: தமிழக மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை


நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருள் ரத்தன். இவரது மனைவி பொன் ராணிக்கு கடந்த 1ம் தேதி காலை 9.55 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தையின் வலது கை தாயின் கர்ப்பப்பையில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், வலது கையில் ரத்த ஓட்டம் தடைபட்டதால் அந்த கை நிறம் மாறத் தொடங்கியது. இதையடுத்து அன்று மாலை 4.30 மணியளவில் மேல்சிகிச்சைக்காக குழந்தை நெல்லை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் வலது கையில் இயக்கம் குறைந்தும், குளிர்ச்சியாகவும், நீலநிற மாற்றம் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

பின்னர் குழந்தைக்கு சிடி ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் வலது அச்சு தமனியில் ரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த ரத்த உறைவை அகற்ற வாஸ்குலர் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து குழந்தைக்கு வாஸ்குலர் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் 5 மணி செய்தனர். இதில் குழந்தையின் வலது கையில் ஒரு முடியின் விட்டத்தை விட குறைவான விட்டம் கொண்ட ரத்த குழாயில் இருந்த ரத்த உறைவு அகற்றப்பட்டது. பின்னர் பச்சிளம் குழந்தை மருத்துவ பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பிறந்த சில மணி நேரங்களில் பச்சிளம் குழந்தைக்கு வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது தமிழக மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த சாதனை என மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தையின் கையை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வந்த மருத்துவர்களுக்கு குழந்தையின் பாட்டி பாண்டியரசி கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

The post வாஸ்குலர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து அசத்தல்; 5 மணி நேரம் போராடி பச்சிளம் குழந்தை கையை மீட்ட நெல்லை அரசு டாக்டர்கள்: தமிழக மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை appeared first on Dinakaran.

Related Stories: