தனி ராஜ்ஜியம் நடத்தி வரும் தமிழக கவர்னரின் நடவடிக்கைகளுக்கு தேர்தலுக்கு பிறகு முடிவு கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

பெரம்பூர்: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டேரியில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘’பிறந்த நாள் என்பது அனைவருக்கும் வருவது ஒன்று. மற்றவர்கள் கொண்டாடுவது வேறு. கட்சி தலைவரின் பிறந்தநாளை மாநிலமே கொண்டாடுவது வேறு. தமிழக மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்க மோடி தண்ணீரின் மீது தவமிருந்தாலும் தரையின் மீது தவம் இருந்தாலும் தரையின் மீது இருக்கிற வாகனத்தின் மீது தவமிருந்தாலும் சரி, பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும். இதுவே மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் அளிக்கிற பிறந்தநாள் பரிசு’ என்றார்.

அமைச்சர் ரகுபதி பேசியதாவது; இன்றைக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் பட்டியல் என்ன என்று கேட்டேன் ஒரு நண்பரிடத்திலே, அவர் சொன்னார் நரேந்திர மோடி ஜி என்றார். யாரும் தமிழ்நாட்டிலே பேச்சாளர்கள் கிடையாது. எனவேதான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு அவர் வந்து செல்கிறார். இந்தியில் பேசி தமிழிலே மொழிபெயர்க்க ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.

மோடி என்னென்ன குரல் கொடுத்தாலும் இன்றைக்கு நாங்கள் மோடியின் முகத்திலேயே பார்ப்பது தேர்தல் பயத்தைதான். அவர் கண்களில் தேர்தல் பயம், தோல்வி பயம் வாட்டிக்கொண்டிருக்கிறது. இருக்கிறதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளதையும் மோடி இழக்க போகிறார். போகிற போக்கில் வட இந்திய மக்களின் அலை மோடிக்கு எதிரான அலையாக உள்ளது. ஒவ்வொன்றையும் நீதி துறையின் மூலம் கொண்டு வரக்கூடிய ஆற்றல் இந்திய மக்களுக்கு உண்டு. குறிப்பாக தமிழக மக்களுக்கு உண்டு.
இவ்வாறு பேசினார்.

இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது; பொன்முடி அமைச்சராக பதவியேற்க எந்த தடையும் இல்லை. ஆளுநர் பதவி ஏற்பு தொடர்பாக விளக்கம் கேட்டால் சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆளுநர் சென்னை திரும்பியதும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தேதி அறிவித்த பின்னரும் பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கல் இல்லை. முன்னரே தெரிவித்து விட்டோம். எனவே தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு பதவி ஏற்பு விழா நடைபெறும். இவ்வாறு ரகுபதி கூறினார்.

The post தனி ராஜ்ஜியம் நடத்தி வரும் தமிழக கவர்னரின் நடவடிக்கைகளுக்கு தேர்தலுக்கு பிறகு முடிவு கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: