சலுகைகளை பெற லஞ்சம் கொடுத்த புகார் : அதானி குழுமம் மீதான விசாரணையை தொடங்கியது அமெரிக்கா!!

வாஷிங்டன் : சலுகைகளை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் அதானி குழுமம் மீதான விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியது. இதையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதாவது ஒரு சில நாட்களில் அதானி குழுமத்திற்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், முறைகேடான செயல்பாடுகளுக்காக அதானி லஞ்சம் கொடுத்துள்ளதா என்பது குறித்த விசாரணையை தற்போது அமெரிக்கா சட்டத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவிலும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களை நடத்தி வரும் அதானி குழுமமோ அல்லது அதன் தலைவர் கவுதம் அதானியோ தங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் லஞ்சம் கொடுத்தார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க சட்டத்துறையின் கீழ் இயங்கும் மோசடி விசாரணை பிரிவு அமெரிக்காவில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசூர் பவர் குளோபல் நிறுவனத்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இதனிடையே கவுதம் அதானி மீதான அமெரிக்க விசாரணை குறித்து தங்களுக்கு எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

The post சலுகைகளை பெற லஞ்சம் கொடுத்த புகார் : அதானி குழுமம் மீதான விசாரணையை தொடங்கியது அமெரிக்கா!! appeared first on Dinakaran.

Related Stories: