நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குசாவடிகளை ஆய்வு செய்ய உத்தரவு

ஊட்டி : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடிகளை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள், வாக்குசாவடி வழித்தடங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம், மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் ஊட்டியில் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், தொடர் திருத்தம்-2024ல் வாக்குசாவடி மையங்களை மறு சீரமைப்பு செய்து, ஒவ்வொரு வாக்குசாவடியிலும் இணைந்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குசாவடி மையங்களுக்கு துணை வாக்குசாவடி மையம் அமைக்கவும், வாக்குசாவடி மையத்தின் கட்டிட மாற்றம், பெயர் மாற்றம் மற்றும் பள்ளிகளின் தரம் உயர்த்துதல், குறைத்தல் ஆகியவை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து மண்டல அலுவலர்களுக்காக நடத்தப்படும் பயிற்சி கூட்டத்தில் 83 மண்டல அலுவலர்கள், உதவியாளர்கள், 83 காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பயிற்சி கையேடு, பதற்றமான வாக்குசாவடிகள் பட்டியல், வாக்குசாவடிக்கான வழித்தட வரைபடம், வாக்குசாவடி மைய ஆய்வு படிவம் ஆகியவை பயிற்சி கூட்டத்தில் வழங்கப்பட்டது.
மேலும், வாக்குபதிவு இயந்திரம், வாக்கு கட்டுப்பாடு இயந்திரம் மற்றும் வாக்குபதிவை உறுதிப்படுத்தும் இயந்திரம் தொடர்பான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மண்டல அலுவலர்கள் வாக்குசாவடிகளை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள், வாக்குசாவடி வழித்தடங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அருணா அறிவுறுத்தினார்.

பின்னர், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும் படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களுக்கான முதல்கட்ட பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திடும் வகையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரைகள் வழங்கினார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளும் போது அதற்குரிய செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் பொறுப்பு அலுவலர் தமிழ்மணி, மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், ஆர்டிஓக்கள் மகராஜ், சதீஸ், செந்தில், தேசிய தகவல் தொழில்நுட்ப மைய அலுவலர் கணேஷ், அனைத்து வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குசாவடிகளை ஆய்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: