பகலும் இரவும் நிறம் மாறும் மரகதப்பவளம்

“அலெக்ஸாண்ட்ரைட்’’ என்று அழைக்கப்படும் பகலில் பச்சையும், இரவில் சிவப்புமாக மாறும் மரகதப்பவளம், மிதுன ராசிக்கு உரியது. இதனை மீனம், விருச்சிகம், மேஷம், ராசிக்காரர்களும் அணியலாம். மரகதப் பவளம் என்னும் அலெக்ஸாண்ட்ரைட் ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கானது. இந்த ராசிக் கல் தொண்டை மற்றும் இதயச் சக்கரத்தை ஊக்குவிக்கும். இக் கல் பதித்த நகைகளை தினமும் அணியலாம். 55-வது பிறந்தநாள் கொண்டாடுவோர், இந்த ரத்தினத்தில் நகை செய்து அணிவது, வெளிநாடுகளில் பழக்கம். சூரிய ஒளியில் பச்சை நிறமாக தெரியும், இரவு ஆகிவிட்டால் சிவப்பாக மாறிவிடும். அலெக்ஸாண்ட்ரைட் அதிர்ஷ்டம், செல்வம், ஞானம் ஆகியவற்றை தரவல்லது. இந்த ரத்தினம், ரஷ்யாவில் உள்ள ஊரல் மலைப் பகுதிகளில் இயற்கையாக கிடைக்கின்றது. இதனைச் செயற்கையாகவும் தயாரிக்கின்றனர். 1950 வரை ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கு, முத்து மட்டுமேதான் ராசி ரத்தினமாக நம்பப்பட்டு வந்தது. அதன் பிறகுதான் அலெக்ஸாண்ட்ரைட் ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கான ராசிக் கல்லாக அறிமுகமானது.

பெயர்க் காரணம்

ஆரம்பத்தில் ரஷ்யாவில் ஊரல் பகுதியில் இந்த ரத்தினம் கிடைத்ததால், அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் அலெக்சாண்டர் என்ற ஜார் மன்னனின் பெயரால் இந்த ரத்தினத்திற்கு அலெக்ஸாண்ட்ரைட் என்று பெயர் சூட்டப்பட்டது.

எந்த விரலில் அணிய வேண்டும்?

மரகதப் பவளம் பதித்த மோதிரத்தை மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் அணிய வேண்டும். வலது இடது கை என்று கணக்கில்லை. எந்தக் கையிலும் அணியலாம்.

அற்புதக் கலவை

பூமியில் கிடைக்கும், கிடைப்பதில் மிக அரிதான மூலகங்களில் ஒன்றான பெரிலியமும் குரோமியமும் இணைந்து அலெக்ஸாண்ட்ரைட்டை உருவாக்குகின்றது. இது மிகவும் அரிய ரத்தினம் ஆகும். பூனைக்கண் ரத்தினம் எனப்படும் கோமேதகத்திற்கு இருக்கும் சக்தி இந்த ரத்தினத்திற்கும் உண்டு. காரணம், இது கோமேதகத்தின் மூல தாதுவான கிறிஸ்டோபெரிலில் இருந்துதான்
எடுக்கப்படுகிறது.

எங்கே கிடைக்கிறது?

பிரேசில் நாட்டில் கிடைக்கும் அலெக்ஸாண்ட்ரைட் ரத்தினம், சற்று நிறம் வெளுப்பாக இருக்கும். வெளிறிய நீலம், வெளிறிய பச்சை, வெளிர் நிறம் போன்ற வர்ணங்களில் கிடைக்கின்றது. லங்காவில் கிடைக்கும் அலெக்ஸாண்ட்ரைட், கரும் பச்சை நிறத்தில் இருக்கும். வெயிலில் கரும்பச்சையாகத் தோன்றும். ஆனால், ரஷ்யாவில் கிடைக்கும் ரத்தினம் வெயிலில் நீலம் கலந்த பச்சையாக தோன்றும். ஜிம்பாப்வேயில் கிடைக்கும் ரத்தினம், பச்சைப் பசேல் என்று இருக்கும். ஆனால், ஜிம்பாப்வேயில் மிகச் சிறிய அளவுகளில்தான் இவை கிடைக்கின்றன. பெரிய கற்கள் கிடைப்பதில்லை. இந்தியாவில் அலெக்ஸாண்ட்ரைட், ஒரிசா மாநிலத்திலும், சட்டீஸ்காரிலும்
கிடைக்கின்றது.

செயற்கை ரத்தினம்

தற்போது செயற்கையாக மரகதப் பவளத்தை உருவாக்குகின்றனர். அதே பெரிலியம் மற்றும் குரோமியம் மூலகங்களைக் கொண்டு உருவாக்கினாலும், இவை பாறையில் இருந்து கிடைப்பவை அல்ல. பரிசோதனைச் சாலையில் இருந்து கிடைப்பவை ஆகும்.

மனநலம் காக்கும் மரகதப் பவளம்

அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்த அலெக்ஸாண்ட்ரைட் அணியலாம். திடீர் கோபம், அழுகை போன்றவற்றால் பலர் முன்னிலையில் அவமானப்பட நேரிடுவோர், அலெக்ஸாண்ட்ரைட் அணிவதால் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, நாகரீகமாக உலாவருவர். “டிப்ரஸிவ் சைக்கோசிஸ்’’ போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள், அலெக்ஸாண்ட்ரைட் அணிவதால், நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு சொத்து சுகம் இருக்கும். அதை அனுபவிக்கும் யோகம் இருக்காது. எதிலும் பற்றற்ற துறவிகள் போல இருப்பார்கள். சிலருக்கு எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் அவர்களுக்கு அதற்கான வசதி வாய்ப்புகள் இருக்காது. இப்படி ஒன்று இருந்து ஒன்று இல்லாமல் இருப்பவர்கள், அலெக்ஸாண்ட்ரைட் அணிவதால் அவர்களுக்கு சொத்தும் சுகமும் கிடைக்கும். அதை நிதானமாக அனுபவிக்கும் மனநிலையும் உருவாகும். மன அழுத்தமும் நீங்கும்.

தொழிலில் மேன்மை

தொழிலில் நிதானமாகச் சிந்தித்து செயல்படவும், புதிய செயல் திட்டங்களை உருவாக்கவும், அலெக்ஸாண்ட்ரைட் அணிவது நல்லது. இதனால், அவசரப்பட்டு முடிவெடுத்து தனக்குத்தானே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் இருந்து மாறலாம். வங்கிப் பணி, கணக்காயர் பணி, வக்கீல் தொழில் செய்வோருக்கு உகந்த ரத்தினமாக மரகதப் பவளம் விளங்கும்.

காதலில் வெற்றி

அலெக்ஸாண்ட்ரைட், காதலிப் போருக்கு உறுதுணையாக இருக்கும், நல்லதோர் ரத்தினமாகும். காதலர் தனக்கு பொருத்தமானவரா? தன்னுடைய தொழிலுக்கு ஏற்றவரா? தன்னுடைய குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவாரா? தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக இருப்பாரா? என்ற பல கேள்விகள் எழும்போது, அவற்றுக்கான பதில்களை நிதானமாகத் தேடுவதற்கு அலெக்ஸாண்ட்ரைட் உதவும்.

செவ்வாய் புதன் சேர்க்கை

சிவப்பும் பச்சையும் கலந்த வர்ணத்தில் அலெக்ஸாண்ட்ரைட் இருப்பதால், செவ்வாய் ராசிக்காரர்களும், புதன் ராசிக்காரர்களும் இந்த ரத்தினத்தை அணிவதால், நல்ல பலன் அடைவர். ஜாதகத்தில் செவ்வாய் புதன் சேர்க்கை உள்ளவர்கள், செவ்வாய் திசையில் புதன் புத்தி அல்லது புதன் திசையில் செவ்வாய் புத்தி நடப்பவர்கள், செவ்வாய் வீட்டில் புதனும், புதன் வீட்டில் செவ்வாயும் இருப்பவர்கள் இந்த ரத்தினத்தை அணிவதால், இரண்டு கிரகங்களில் நற்பலன்களையும் பெறுவர்.

கல்வியில் மேன்மை

புதனுக்கு உண்டான ரத்தினமாக அலெக்ஸாண்ட்ரைட் இருப்பதால், புதன் தரக்கூடிய புத்தி, ஞானம், நுண்ணறிவு கலைகளில் தேர்ச்சி ஆகியவற்றை மரகதப் பவளம் வழங்கும்.

நரம்புத்தளர்ச்சி நீங்கும்

நரம்பு தொடர்பான நோய் உள்ளவர்கள், மூளை தொடர்பான நோய் உள்ளவர்கள், நரம்பு அணுக்களில் பிரச்னை உள்ளவர்கள், கணையம், கல்லீரல் போன்றவற்றில் பிரச்னை உள்ளவர்கள், அலெக்ஸாண்ட்ரைட் அணிவதால், அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையின் முழு பலனைப் பெறுவர்.

நச்சுக் கொல்லி

உடம்பில் இருக்கும் நச்சுக்கிருமிகளை, விஷக்கிருமிகளை, நோய்க்கிருமிகளை அகற்றி அலெக்ஸாண்ட்ரைட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றக் கூடியது.

 

The post பகலும் இரவும் நிறம் மாறும் மரகதப்பவளம் appeared first on Dinakaran.

Related Stories: