வணிகர்களுக்கும் பாதுகாப்பு சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

 

சிவகங்கை, மார்ச் 14: சிவகங்கையில் நடைபெற்ற வணிகர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மதுரையில் மே 5ல் வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெறவுள்ளது. 25ஆண்டுகளுக்குப் பிறது மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில், வணிகர் பாதுகாப்புச் சட்டம், ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்படும் சாமானிய வியாபாரிகளை காப்பாற்ற சட்டம் வேண்டும் என்பன 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. வணிகர்கள் குண்டர்களால், சமூகவிரோதிகளால் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். எனவே, மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல வணிகர்களுக்கும் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். 2017ல் பிரதமர் மோடியால் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்பொழுது சர்வர் வேலை செய்யவில்லை என அதிகாரிகள் கூறினர்.

ஜிஎஸ்டி தொடர்பான எந்த விவரங்களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளுக்கு தற்போது வரி விதித்து கடிதம் அனுப்புகின்றனர். 4முனை வரியை ஒரு முனை வரியாக மாற்ற வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். குட்கா தடைச்சட்டம் சிறு வணிகர்களிடம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சொத்துவரி, மின் கட்டணம் உள்பட பல்வேறு இன்னல்களால் வணிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே வரும் மக்களவை தேர்தலில் ஆதரவளிப்போம். இவ்வாறு தெரிவித்தார்.

The post வணிகர்களுக்கும் பாதுகாப்பு சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: