கிளாம்பாக்கம் ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்க ரூ.79 கோடியில் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நடைமேம்பாலம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில் ரூ.79 கோடி மதிப்பில் கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைக்க அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். வண்டலூர் அடுத்த கிளாம்பக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவர் மற்றும் இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே, ரூ.79 கோடி மதிப்பீட்டில் 220 மீட்டர் நீளத்தில் புதிய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இம்முனையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல்மிஸ்ரா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் சிறப்பு அலுவலர் ஜெயக்குமார், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post கிளாம்பாக்கம் ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்க ரூ.79 கோடியில் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நடைமேம்பாலம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: