சேலம் மாநகராட்சி செட்டிசாவடி குப்பை மேட்டை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்த ₹50 கோடி

*முதல்வர் அறிவிப்பால் 100 ஏக்கர் நிலம் பசுமையாக மாறும்

சேலம் : சேலம் மாநகராட்சி செட்டிசாவடி குப்பை மேட்டை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்த ₹50 கோடியை முதல்வர் அறிவித்தார். இதனால் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குப்பைமேடு இடம், 100 ஏக்கர் பசுமையாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாநகராட்சியானது 92.14 கி.மீட்டர் பரப்பளவில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களை கொண்டுள்ளது. இந்த 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 10.83 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள மாநகராட்சியில், 2.38 குடியிருப்புகள் உள்ளன.

25,457 வணிக நிறுவனங்களையும், 8 தினசரி சந்தைகள், 2 பஸ் நிலையம், சேலம் ரயில்வே கோட்டம், சேலம் ரயில் நிலையம், டவுன் ரயில் நிலையம், லீ பஜார் என்ற பெயரில் பெரிய அளவிலான உணவு தானியங்கள் விற்பனை மையம் உள்ளன.இம்மாநகருக்கு வெளியூர்களில் இருந்து தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 550 டன் திடக்கழிவுகள் உருவாகிறது.

மாநகராட்சியால் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை கையாள மாநகர எல்லைக்குள் போதிய இடவசதி இல்லாததால் மாநகரில் மையப்பகுதியில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ள செட்டிசாவடி கிராமத்தில் வருவாய் துறையால் கைவிடப்பட்ட சுரங்க பகுதியில் எதற்கும் பயன்படாத 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் தற்போது சேலம் மாநகரில் உருவாகும் திடக்கழிவுகளில் 319 டன் திடக்கழிவுகளை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள், தள கலவை உரக்கிடங்கு மற்றும் உயிரி எரிவாயு நிலையம் ஆகியவற்றின் மூலமாக செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.எதற்கும் உபயோகமற்ற, மக்கும் தன்மையற்ற எரியக்கூடிய கழிவுகளை செயலாக்கம் செய்திட 25 டன் அளவிற்கு எரியூட்டும் திறன் கொண்ட எரியூட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 18.5 ஏக்கர் பரப்பளவில், 5.5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி மின் உற்பத்தி தகடுகள்அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3 கோடியில் 3 எண்ணிக்கையில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சாக்கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் மண்கழிவுகள், திடக்கழிவு செயலாக்கத்தின் போது உருவாகும் எதற்கும் உதவாத கழிவுகள் மற்றும் கட்டிட இடிபாட்டு கழிவுகள் ஆகியவை தற்காலிகமாக செட்டிசாவடி திடக்கழிவு மேலாண்மைதிடலில் கொட்டி வைக்கப்படுகிறது.

இவற்றை பயனுள்ள வகையில் மாற்றி அழித்திட தற்போது ரூ.3 கோடியில் நவின தொழில் நுட்பத்துடன் கூடிய கட்டுமானம் மற்றும் கட்டிட இடிபாட்டு கழிவுகள் செயலாக்க ஆலை ஒன்று தூய்மை பாரத திட்டம் 2.0 மூலம் செட்டிச்சாவடி திடலில் அமைக்க நகராட்சி நிர்வாக இயக்குனரக தொழில் நுட்ப அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

100 ஏக்கர் பரப்பளவில் செட்டிச்சாவடி திடக்கழிவு மேலாண்மை திடல் பகுதியின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு கருதி ரூ.1.98 லட்சத்தில் மதிற் சுவர் மற்றும் இரவு நேரத்தில் திடக்கழிவு வாகனங்களை இயக்கிட ஏதுவாக ரூ.16 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படுகிறது. திடக்கழிவுகளை அளவீடு செய்ய ரூ.10லட்சத்தில் எடைமேடை அமைக்கப்படுகிறது.

இதனிடையே ஏற்காடு அடிவாரத்தில் பல ஆண்டாக குப்பை மேடாக காட்சியளிக்கும் 100 ஏக்கர் நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தர்மபுரியில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார். அதில், சேலம் மாநகராட்சியில் செட்டிச்சாவடி வளாகத்தில் இருக்கின்ற குப்பை மேடு பயோ- மைனிங் முறையில் அப்புறப்படுத்தும் பணிகள் ரூ.50 கோடியில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால் அக்கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: செட்டிசாவடி குப்பை மேடு பயோ மைனிங் அப்புறப்படுத்தும் பணிகள் ரூ.50 கோடியில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஏற்காடு அடிவாரத்தின் பசுமை நிறைந்த பகுதிகளை மீண்டும் கொண்டு வரப்படும்.

இதற்காக, செட்டிச்சாவடியில் நீண்ட ஆண்டுகளாக கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டை பயோ மைனிங் முறையில், மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து எடுக்கப்படும். மக்கும் குப்பை உரமாக்கப்படும், மக்காத குப்பை பொருட்களை மறு சுழற்சிக்கு அளிக்கப்படும். இதன் மூலம் அங்கு குப்பை இல்லாமல் செய்து, 100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்படும் என்றார்.

The post சேலம் மாநகராட்சி செட்டிசாவடி குப்பை மேட்டை பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்த ₹50 கோடி appeared first on Dinakaran.

Related Stories: