2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 3விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில் 172 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் நியூசி. 162 ரன்னுனுக்கு சுருண்ட நிலையில், ஆஸி. 256 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 94 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து சிறப்பாக விளையாடி 372 ரன் குவித்தது.
இதைத் தொடர்ந்து, 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்திருந்தது (24 ஓவர்). ஹெட் 17, மார்ஷ் 27 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹெட் 18 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் யங் வசம் பிடிபட்டார்.

ஆஸி. 80 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், மிட்செல் மார்ஷ் – அலெக்ஸ் கேரி ஜோடி 6வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 140 ரன் சேர்த்தது. பென் சியர்ஸ் வேகத்தில் மார்ஷ் (80 ரன்,102 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டார்க் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து நம்பிக்கையுடன் தாக்குதலை தீவிரப்படுத்தியது. எனினும், கேரி – கேப்டன் கம்மின்ஸ் இணைந்து பொறுப்புடன் ரன் குவிக்க, ஆஸ்திரேலியா 65 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கேரி 98 ரன் (123 பந்து, 15 பவுண்டரி), கம்மின்ஸ் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் சியர்ஸ் 4, ஹென்றி 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் கேரி (ஆஸி.), தொடர் நாயகனாக மேட் ஹென்றி (நியூசி.) தேர்வு செய்யப்பட்டனர்.

The post 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Related Stories: