நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கியது. ஒன்றிய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.

அப்போது விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். போலிசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயியான சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதன் காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே டெல்லி நோக்கிய பேரணி முடிவை திரும்ப பெற போவதில்லை எனவும் மார்ச் 10-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

The post நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: