விழுப்புரம் அருகே பரபரப்பு அரசு மருத்துவமனையில் பைக்குகளை திருடிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

*25 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருசக்கர வாகனங்கள் பல வருடங்களாக தொடர்ச்சியாக திருடு போய் உள்ளது. இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பல வருடங்களாக இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த வண்ணம் உள்ளது, மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி சுரேஷ் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார், அதில் காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தபோது பல்வேறு இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவைல் இருப்பதை கண்டு போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் குற்றவாளியை உடனடியாக பிடிக்க இரண்டு சிறப்பு தனிப்படை அமைக்க உத்தரவிட்டிருந்தார் .

மேலும்அப்பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் தொடர்ச்சியாக ஒரு நபர் மட்டும் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வரும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணையை துவங்கினர். இதைத்தொடர்ந்து. விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ் ஞானக்குமார் ஏட்டுக்கள் தேவநாதன் செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பஸ் நிலையம் அருகே எஸ்.ஐ காத்தமுத்து மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது மருத்துவக் கல்லூரி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தபோது அந்த வாலிபர் பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மணி மகன் சுரேஷ் என்பதும் (31), இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 வருடங்களாக பகுதி நேர ஊழியராக வேலை செய்ததும், பின்பு ஓட்டுநர் உரிமம் பெற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலயே ஆம்புலன்ஸ் டிரைவராக இரண்டு வருடங்கள் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி இருப்பதாகவும் முதல் கட்டமாக 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகன திருட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்?யார்? என்பது குறித்தும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விழுப்புரம் அருகே பரபரப்பு அரசு மருத்துவமனையில் பைக்குகளை திருடிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: