திருவண்ணாமலை நகராட்சியில் ₹55.49 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்

*அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.55.49 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.55.49 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் தொடக்க விழா நேற்று தேனிமலை பகுதியில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார். நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன் வரவேற்றார்.

திருவண்ணாமலை நகராட்சி குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி வைத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:திருவண்ணாமலை நகராட்சி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இந்த நகரின் வளர்ச்சிப் பணிக்கு தனிகவனம் செலுத்துகிறோம்.

கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது ரூ.36 கோடியில் 3வது கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். அதன்பிறகு, திருவண்ணாமலை நகராட்சியில் 30 சதவீதம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. குடிநீர், சாலை, மின்விளக்கு ஆகிய 3 கோரிக்கைகளை தான் கவுன்சிலர்களிடம் மக்கள் வைக்கின்றனர். எனவே, அதை நிறைவேற்றுவது அரசின் கடமை. எனவே, தற்போது குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதை மற்றும் தேரோடும் வீதியில் இருசக்கர வாகனம்கூட செல்ல முடியாதபடி பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. எனவே, மாடவீதியில் உள்ள மார்க்கெட் காந்தி நகர் பகுதிக்கு மாற்றப்படுகிறது. மேலும், புதிய பஸ் நிலையமும் அமைக்கப்படுகிறது. நிதி ஆதாரம் அதிகம் உள்ளதால், ஒன்றிய அரசு தான் 4 வழிச்சாலைகளை அமைப்பது வழக்கம்.

மாநில அரசு இதுவரை 5 மீட்டர், 7 மீட்டர், 10 மீட்டர் சாலை தான் அமைத்துக்கொண்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் முக்கிய சாலைகளை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தொடர்ந்து, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தற்போது 4 வழிச்சாலைகள் அமைக்கப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை- திருக்கோவிலூர், திருவண்ணாமலை- தர்மபுரி ஆகிய சாலைகள் அமைத்திருக்கிறோம். இந்த ஆண்டு திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.திருவண்ணாமலை நகராட்சிக்கு ஏற்கனவே 3 குடிநீர் திட்டங்கள் மூலம் 2.20 கோடி லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, 4 வழிச்சாலை அமைப்பதால், சாலையின் நடுவில் குடிநீர் பைப்லைன்கள் சிக்கியிருக்கிறது. அதனால்,பைப்லைன்கள் சேதமடைந்து, குடிநீர் விநியோகம் தடைபடும்.

எனவே, திருவண்ணாமலை நகராட்சிக்கு 4வது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.55.49 கோடியை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், தினமும் 2.80 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதனால், தனி நபருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். மேலும், சர்வதேச தரத்தில் பைப்கள் அமைத்து, இப்பணியை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்ததும், அண்ணா நகர், தேனிமலை பகுதிகளில் தேவையான இடங்களில் சாலைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏ மு.பெ.கிரி, மூத்தோர் தடகளச்சங்க துணைத்தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகராட்சி துணைத்தலைவர் சு.ராஜாங்கம், நகராட்சி ஆணையர் வசந்தி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரியா விஜயரங்கன், எஸ்.பன்னீர்செல்வம், துரை.வெங்கட் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை நகராட்சியில் ₹55.49 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: