விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது… கொப்பரைக்கு அனுப்பப்படும் தேங்காய்கள்: பருப்புகளை உலர வைக்கும் பணி தீவிரம்

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் தேங்காய்களை குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். மேலும், கொப்பரைக்கு அனுப்ப தேங்காய் பருப்புகளை உலர்த்தும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலூத்து, மயிலாடும்பாறை, குமணந்தொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், கடமலைக்குண்டு ஆகிய ஊர்களில் 300 ஏக்கருக்கும் மேல் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்களை காங்கேயம், திருச்சி, புதுச்சேரி, சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த ஒன்றியத்தில் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தேங்காய் விலை குறைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் 15 ரூபாய்க்கு விற்ற தேங்காய் தற்போது ரூ.12 முதல் 13 வரை விற்பனையாகிறது.

தரம் பிரிப்பு: இந்த ஒன்றியத்தில் விளைவிக்கப்படும் தேங்காய் மூன்று தரமாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்சமயம் விலை குறைவுக்கு விளைச்சல் அதிகரிப்பு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் விற்பனைக்கு வருவதும் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளார். போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தேங்காய்களை உடைந்து, அதனை வெயிலில் உலர வைத்து எண்ணெய் தயாரிப்பிற்கு அனுப்புகின்றனர். கொப்பரை தேங்காய் பருப்பு விலை தற்போது ஒரு கிலோ ரூ.60 முதல் 80 வரை விற்பனையாகிறது. இதனால், இந்த ஒன்றியத்தில் உள்ள குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. மதுரை, தேனியைச் சேர்ந்த மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் தேங்காய் பருப்பு வாங்க கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு பகுதிகளில் தங்கியுள்ளனர். எனவே, தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது… கொப்பரைக்கு அனுப்பப்படும் தேங்காய்கள்: பருப்புகளை உலர வைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: