பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க சி-விஜில் ஆப் மூலம் வீடியோ அனுப்பலாம் : தமிழக தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்!!

சென்னை : நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “மக்களவை தேர்தலுக்காக 1.7 லட்சம் வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 93,000 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 99,000 விவிபேட் கருவிகளு தயாராக உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளன. கூடுதலாக 20% அளவுக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வேட்பாளர்களின் அத்துமீறல்களை பொதுமக்கள் கண்காணித்து உதவ-ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க சி-விஜில் ஆப் மூலம் வீடியோ அனுப்பலாம். புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்,”இவ்வாறு தெரிவித்தார். வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல்விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க ‘சி-விஜில்’எனும் செயலியை தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலியை (c -VIGIL) ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பவர்கள் ‘கூகுள் பிளே ஸ்டோர்’ அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செயலாம். அதில், அலை பேசி எண், பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், பின்கோடு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது. இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

The post பணம், பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க சி-விஜில் ஆப் மூலம் வீடியோ அனுப்பலாம் : தமிழக தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: