நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் காணொலி காட்சியில் சுற்றுலா பயணிகளிடம் நிறை, குறைகளை கேட்டறிந்த அமைச்சர்: அலுவலர்களும் பங்கேற்பு

ஆண்டிபட்டி, மார்ச் 7: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை சுற்றுலாத்தலத்தை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலாப் பயணிகளிடம் நிறை, குறைகளை காணொலி காட்சி வாயிலாக கேட்டறிந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நலமா திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் நேரடி தொடர்பு கொண்டு பல்வேறு துறை வாயிலாக நிறை, குறைகளை கேட்டு அறிந்து, தீர்க்கும் நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதிலும் உள்ள பல சுற்றுலாத்தலங்களை ஒருங்கிணைத்து சுற்றுலாத் துறை அலுவலர்கள் மூலம் காணொலி காட்சி வாயிலாக ஒவ்வொரு சுற்றுலா மையத்தையும் தொடர்பு கொண்டு சுற்றுலாப் பயணிகளிடம் நிறை குறைகளை அமைச்சர் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக வைகை அணை சுற்றுலா தலத்தை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் மூலமாக சுற்றுலா பயணிகளிடம் அமைச்சர் ராமச்சந்திரன் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த பிரனேஷ் தம்பதிகள் வைகை அணை பூங்கா மிகவும் நேர்த்தியாக, ரம்யமாக காட்சியளிக்கிறது என்றும், அதே நேரம் நீர்த்தேக்க பகுதிக்கு செல்வதற்கு வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டு களிப்பதற்கு வசதியாக இங்கு ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்றும், நீர் தேக்கப் பகுதியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் அரசுக்கு வருவாயும், சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

The post நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் காணொலி காட்சியில் சுற்றுலா பயணிகளிடம் நிறை, குறைகளை கேட்டறிந்த அமைச்சர்: அலுவலர்களும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: