கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம்; இமாச்சல் காங். எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: இமாச்சலபிரதேச சட்டப்பேரவையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்களும், அதேபோன்று அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேட்சை உறுப்பினர்கள் 3 பேரும் எதிர்க்கட்சியான பாஜவின் வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

இந்த நடவடிக்கையால் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஹர்ஷ் மகாஜன் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து பாஜகவுக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் உறுப்பினர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்து கடந்த வாரம் சபாநாயகர் குல்தீப் சிங் உத்தரவிட்டார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆறு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “இந்த விவகாரத்தில் சபாநாயகர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளார். அதனால் அவரது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த மனுஅடுத்த ஓரிரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம்; இமாச்சல் காங். எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: