முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை; காது கேட்கும், பேசும் திறன் பெற்ற 10 குழந்தைகள்:திண்டுக்கல் ஜி.ஹெச் டாக்டர்கள் சாதனை

திண்டுக்கல்: பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேசாத 10 குழந்தைகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து காது கேட்கும், பேசும் திறனை வர வைத்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறவியிலேயே செவி உணர்வு இல்லாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு தனிப்பிரிவு அமைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சிகிச்சைக்கான செலவு ₹7 லட்சமாகும். இந்த முழு செலவையும் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அரசு ஏற்றுக் கொண்டு இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நிலக்கோட்டை, தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 குழந்தைகள் காது கேட்காத, வாய் பேச முடியாத குறைபாடுகளால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர். இவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் சோதனை செய்து அதிலுள்ள குறைபாடுகளை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் செவி, பேச்சு திறன் பெற்ற டாக்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஓராண்டு காலத்தில் குழந்தைகள் சரளமாக பேச முடிந்ததுடன், காது கேட்கும் திறனையும் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி கூறுகையில், ‘பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத 10 குழந்தைகளுக்கு தலா ₹7 லட்சம் வீதம் ₹70 லட்சம் செலவில் ‘காக்ளியர் இம்பிளான்ட்’ என்னும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த குழந்தைகளுக்கு ஒரு வருட காலம் செவி, பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தைகள் நன்கு காது கேட்கும் மற்றும் பேச்சு திறனை பெற்றுள்ளனர்’’ என்றார்.

The post முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை; காது கேட்கும், பேசும் திறன் பெற்ற 10 குழந்தைகள்:திண்டுக்கல் ஜி.ஹெச் டாக்டர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: