ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான முருகன் உள்ளிட்ட 3 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: முருகன் உட்பட 3 பேரை இலங்கை அனுப்புவதற்கு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தாயை கவனிக்க தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனின் உடலை விரைவாக இலங்கைக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாந்தனின் மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி முகாமில் உள்ளனர். தங்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் நீதிபதிகளிடம் கோரினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா? என்பது குறித்து தெரியவில்லை என்றார். இதனையடுத்து, இது சாந்தன் தொடர்பான வழக்கு. எனவே, மூன்று பேர் தொடர்பாக இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக்கூறிய நீதிபதிகள், மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

The post ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான முருகன் உள்ளிட்ட 3 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: