நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவினர் போட்டி போட்டு விருப்ப மனு: தூத்துக்குடி தொகுதிக்காக கனிமொழி இன்று மனு அளிக்கிறார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ, நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவுகிறது. தேர்தலை சந்திக்கும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து வருகிறது.

திமுகவை பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதே போல காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓரிரு நாளில் ெதாகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அதன்பின் வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் திமுக முழுவீச்சில் இறங்கியுள்ளது. இம்முறை கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களில் திமுக போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை திமுகவினர் வாங்கி சென்றனர். தொடர்ந்து பூர்த்தி செய்த மனுக்கள் கடந்த 1ம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டு வருகிறது. போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள் ரூ.50,000 கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். பல்வேறு தொகுதிகளில் திமுக முன்னணியினர் போட்டியிட வேண்டும் என்றும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

குறிப்பாக மத்திய சென்னையில் தயாநிதி மாறன் எம்பி போட்டியிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் ஏராளமான திமுகவினர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இதே போல பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் போட்டியிட கோரி நிறைய பேரின் விருப்ப மனுக்கள் வந்துள்ளன. வருகிற 7ம் தேதி மாலை 6 மணி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்படும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கடைசி தேதி நெருங்குவதால் விருப்பமனுக்களை அளிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக துணை ெபாது செயலாளர் கனிமொழி எம்பி இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்க உள்ளார். இதே போல பல முக்கிய பிரமுகர்களும் இன்று விருப்ப மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவினர் போட்டி போட்டு விருப்ப மனு: தூத்துக்குடி தொகுதிக்காக கனிமொழி இன்று மனு அளிக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: