காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை கணவரும் விஷம் குடித்து பலி பள்ளிகொண்டா அருகே பரிதாபம் 4 ஆண்டு காதல் 4 மாதத்தில் கசந்தது

பள்ளிகொண்டா, மார்ச் 5: பள்ளிகொண்டா அருகே 4 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு பூவரசன்(28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பூவரசன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் சேர முயற்சி செய்து கொண்டே வேலூரில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இதனிடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும்போது பள்ளிகொண்டா அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சேகரின் இரண்டவாது மகள் ஐஸ்வர்யா(24) என்பவருடன் பூவரசனுக்கு அறிமுகமாகி 4 ஆண்டுகளாக காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை சார்பில் வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் நடைபெற்ற இலவச திருமண திட்டத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

இதனையடுத்து பூவரசன், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் பெற்றோர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில் திருமணமானதில் இருந்து கடந்த 4 மாத்தில் ஐஸ்வர்யா தனது காதல் கணவன் பூவரசனிடம் வெளியில் எங்கேயாவது கூட்டி கொண்டு போகமாட்டாயா என கேட்டு வந்துள்ளார். திருமணமாகி உங்கள் வீட்டை தவிர என்னை எங்கேயும் அழைத்து செல்லவில்லை எனவும் கூறி அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகள் எழுந்து வந்துள்ளது.
அதற்கு பூவரசன் இரவு நேரத்தில் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு வந்த களைப்பில் பகல் நேரத்தில் ஒய்வெடுக்கவே நேரம் சரியாக உள்ளது எனக் கூறி சமாதானம் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 1ம் தேதி ஐஸ்வர்யாவின் அம்மா வீடான கழனிப்பாக்கம் கிராமத்தில் நடந்த மாடுவிடும் திருவிழாவிற்கு பூவரசன்-ஐஸ்வர்யாவும் சென்று வந்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை இது சம்மந்தமாக மீண்டும் பூவரசனுக்கும், ஜஸ்வர்யாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

வாய்த்தகராறு முற்றியதில் ஜஸ்வர்யா திடீரென வீட்டின் தனி அறையில் சென்று மின்விசிறி மாட்டும் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக்கொண்டாராம். சத்தம் கேட்டு கணவன் பூவரசன், மாமனார் ரவி ஆகியோர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஐஸ்வர்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே தகவலறிந்து சென்ற பள்ளிகொண்டா இனஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், இறந்த ஐஸ்வர்யாவின் உடலை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ந நிலையில் கணவன் பூவரசன் மற்றும் இருவீட்டார் உறவினர்கள் மருத்துவமனையிலேயே காத்திருந்துள்ளனர்.

அப்போது, பூவரசன் என் காதல் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாளே என மனவேதனையுடன் அங்குள்ளவர்களிடம் கூறி இரவு முழுவதும் அழுதுள்ளார். இதனையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் மருத்துமனை வளாகத்தில் இருந்த பூவரசன் கழிவறைக்கு சென்று திரும்பியுள்ளார். தொடர்ந்து சில மணி நேரத்தில் பூவரசன் வாயில் நுரை தள்ளியபடி மருத்துவமனை வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும் உடேன பூவரசனுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்போதே பூவரசன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கழிவறைக்கு சென்ற பூவரசன் அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற குடியாத்தம் போலீசார் பூவரசனின் உடலை மீட்டு அந்த மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனைக்கு பரிந்துரை செய்தனர். மேலும், திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணை நடத்த உள்ளதால் ஐஸ்வர்யாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து ஐஸ்வர்யா தந்தை கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசாரும், பூவரசன் தந்தை கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகள் காதலித்து 4 மாதங்களுக்குள் காதல் தம்பதியினர் இறந்த சம்பவம் இரு கிராமங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை கணவரும் விஷம் குடித்து பலி பள்ளிகொண்டா அருகே பரிதாபம் 4 ஆண்டு காதல் 4 மாதத்தில் கசந்தது appeared first on Dinakaran.

Related Stories: