ஆர்.கே.பேட்டை அருகே ரூ.5.50 கோடியில் உயர்மட்ட மேம்பால பணி: எம்.எல்.ஏ ஆய்வு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே திருநாதராஜபுரம் பகுதியில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை எஸ்.சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே திருநாதராஜபுரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வீரமங்கலம் ஏரி வரவு கால்வாயில் மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது அங்குள்ள தரைமட்ட மேம்பாலத்தில் செடி கொடிகள் சிக்கிக்கொண்டு மழை வெள்ளம் பாலத்தின் மீது கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வர முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராமசாலை அலகு திட்டத்தின் கீழ் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி அங்கு நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் தரமாகவும், மழைக்காலம் தொடங்கும் முன் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை திருத்தணி உபகோட்ட உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், ஒன்றியக்குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், மாணிக்கம், ஒன்றிய திமுக செயலாளர்கள் சண்முகம், பழனி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரகு, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே ரூ.5.50 கோடியில் உயர்மட்ட மேம்பால பணி: எம்.எல்.ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: