சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்!

ஹைதராபாத்: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 22ம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 6வது சாம்பியன் பட்டத்தை வென்று லட்சக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை நொறுக்கியது.

அதேபோல் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் இந்திய அணிய வீழ்த்தி சாம்பியனானது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது சரியே என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் எஸ்ஏ டி20 தொடரில் தொடர்ந்து 2வது முறையாக எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் வென்றது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அவரே கேப்டனாக இருந்தார். இதையடுத்து நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் எய்டன் மார்க்ரம் கேப்டனாக செயல்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17வது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கும், இந்திய வீரர்கள் ஜெயதேவ் உனத்கட் ரூ.1.60 கோடிக்கும், ஆகாஷ் சிங் மற்றும் ஜதவேத் சுப்பிரமணியன் தலா ரூ.20 லட்சத்திற்கும், இலங்கை அணி வீரர் வணிந்து ஹசரங்கா ரூ.1.50 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

The post சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்! appeared first on Dinakaran.

Related Stories: