டெல்லியில் இனி ஒருபோதும் பாஜ தலை தூக்காது; அமைச்சர் துரைமுருகன் பேச்சு

அணைக்கட்டு, மார்ச் 4: இந்தியா கூட்டணி உடையவில்லை, உயர்ந்து வருகிறது. டெல்லியில் இனி ஒருபோதும் பாஜ தலை தூக்காது என அமைச்சர் துரைமுருகன் பேசினார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் பிஎல்ஏ 2, பிஎல்ஏசி கிளை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நந்தகுமார் தலைமை தாங்கினார். எம்பி கதிர் ஆனந்த், மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சரும், கட்சி பொதுச்செயலாளருமான துரைமுருகன் பேசியதாவது:
திமுக என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமான பொதுவான இயக்கம். இந்த இயக்கம் தொடங்காவிட்டால் நம்மை போன்றவர்கள் யாரும் பொறுப்புகளில் இருந்திருக்க முடியாது. தலைவரை விட தளபதியின் புகழ் உயர்ந்திருக்கிறது. இந்தியா கூட்டணி உடைவதாக சொல்கிறார்கள். ஆனால், இந்தியா கூட்டணி உடையவில்லை, உயர்ந்து வருகிறது. நான் உறுதியாக சொல்கிறேன் இனி எந்த காலத்திலும் டெல்லியில் பாஜ தலை தூக்காது. தேர்தலுக்கு முன்பு சொல்லக்கூடாத வார்த்தைகள் எல்லாம் சொல்லி வருவதன் மூலம் அவர்களுக்கே ஒரு பயம் வந்துவிட்டது.

மத்தியிலே ஆளுங்கட்சியாக இருப்பவர்கள், மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தால் அதை எதிர்ப்பார்களே தவிர, வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால், தற்போதுள்ள மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சரியாக நிதியை வழங்குவதில்லை. ஒரு தொகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அணைக்கட்டு தொகுதியை எம்எல்ஏ நந்தகுமார் வைத்துள்ளார். 2வது முறையாக இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று அந்த அளவிற்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

The post டெல்லியில் இனி ஒருபோதும் பாஜ தலை தூக்காது; அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: