எம்.பி, எம்.எல்.ஏக்களை 24மணி நேரமும் டிஜிட்டலில் கண்காணிக்க கோரி வழக்கு: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: எம்.பி., எம்.எல்.ஏக்களை 24 மணி நேரமும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் சுரேந்திர நாத் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘ எம்.பி, எம்.எல்.ஏக்களின் நடவடிக்களை 24மணி நேரமும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் நேரில் ஆஜராகி அவரது கோரிக்கையை நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘எம்.பி, எம்.எல்.ஏக்கள் என்பவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். மேலும் அவர்கள் அரசாங்காத்தின் கொள்கையின்கீழ் பணியாற்றுபவர்கள். அவர்களை எப்படி டிஜிட்டல் முறையில் கண்காணிக்க முடியும். அவர்களின் உடலில் மின்னணு சிப்களையா பொருத்த முடியும்.

ஒவ்வொருவருக்கும் தனியுரிமை என்று உள்ளது. அதில் யாராலும் தலையிட முடியாது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் இந்த விசாரணை நேரம் என்பது பொதுமக்களுக்கானது. அதனை இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து வீணடிக்கிறீர்கள் என்று காட்டமாக தெரிவித்தார். தலைமை நீதிபதிமேலும் கூறுகையில்,, ‘‘ உங்களுக்கு ரு.5 லட்சம் வரையில் அபராதம் விதித்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நாங்கள் செய்யவில்லை. இருப்பினும் மனுதாரர் இதுபோன்ற வழக்குகளை வருங்காலத்தில் பதிவு செய்யக் கூடாது என்று பதிவு செய்து அபராதம் விதிக்காமல் விட்டுவிடுகிறோம். உங்களது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றார்.

The post எம்.பி, எம்.எல்.ஏக்களை 24மணி நேரமும் டிஜிட்டலில் கண்காணிக்க கோரி வழக்கு: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: