புரோ கபடி 10வது சீசன் புதிய சாம்பியன் புனேரி பல்தான்

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் பைனலில் புனேரி பல்தான் 28-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸடீலர்ஸ் அணியை வீழ்த்தி புதிய சாம்பியனாக முடிசூடியது. ஐதராபாத் ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்த பரபரப்பான பைனலில் தொடர்ந்து 2வது முறையாக புனேரி பல்தான் அணியும், முதல் முறையாக அரியானா ஸடீலர்ஸ் அணியும் மோதின. சீசனின் தொடக்கம் முதலே பட்டம் வெல்லும் அணியாக புனேரி பல்தன் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப அந்த அணி லீக் சுற்றில் 22 ஆட்டங்களில் 2ல் மட்டுமே தோற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் அதிக புள்ளிகள் குவித்து வலுவான அணியாக நேற்று களம் கண்டது. அதே சமயம் 5வது இடம் பிடித்த அரியானா நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி பைனலுக்கு முன்னேறியது. விறுவிறுப்பான முதல் பாதி முடிவில் புனே 13-10 என முன்னிலை வகித்தது. 2வது பாதியில் புனே வீரர் மோகித் கோயத் தனது ரெய்டு மூலம் முதல் ஆல் அவுட்டை நிகழ்த்தினார்.

அதனால் புனே 18-12 என சற்று வலுவான நிலையை எட்டியதுடன் தொடர்ந்து புள்ளிகளைக் குவித்து முன்னேறியது. கடைசி நிமிடத்தில் வாய்ப்பு பெற்ற அரியானா வீரர் சித்தார்த் தேசாய் அடுத்தடுத்து 4 புள்ளிகளை குவிக்க ஆட்டம் பரபரப்பானது. எனினும், புனேரி பல்தான் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று புதிய சாம்பியனாக முத்திரை பதித்து கோப்பையை கைப்பற்றியது.

பரிசு மழை
* சாம்பியன் புனேரி பல்தன் ரூ.3 கோடி

* 2வது இடம் பிடித்த அரியானா ஸ்டீலர்ஸ் ரூ.1.8 கோடி

* அரையிறுதி வரை முன்னேறிய ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு தலா ரூ. 90லட்சம்.

* பிளேஆப் சுற்றில் விளையாடிய குஜராத் ஜயன்ட்ஸ், தபாங் டெல்லி அணிகளுக்கு தலா ரூ.45 லட்சம்.

* பைனலின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக கவுரவ் (4புள்ளிகள்), சிறந்த ரெய்டராக பங்கஜ் மோகித் (9 புள்ளிகள்) தேர்வாகினர் (புனே).

The post புரோ கபடி 10வது சீசன் புதிய சாம்பியன் புனேரி பல்தான் appeared first on Dinakaran.

Related Stories: