அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பொது பட்டியலில் சேர்க்காத விவகாரம் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வாளர் பட்டியல் ரத்து: புதிய பட்டியலை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பொதுப்பட்டியலில் சேர்க்காமல் இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்த்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் புதிய பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஜூன் 1ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

முதல் நிலை தேர்வு பிரதான தேர்வு நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த நவம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த 16ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து ஜெ.சீனா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் பாலன் ஹரிதாஸ், மூத்த வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், தாட்சாயினி ரெட்டி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை முதலில் பொதுப்பட்டியலிலும், அதன் பிறகு காலி பின்னடைவு பட்டியலும், அதை தொடர்ந்து இட ஒதுக்கீடு பட்டியலிலும் சேர்த்து வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மீறி இட ஒதுக்கீட்டின் கீழ் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, உரிய ஒதுக்கீடு நடைமுறைகளை கடைபிடிக்காமல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொது பிரிவில் சேர்த்தும், மீதமுள்ள விண்ணப்பதாரர்களை இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றியும், காலிப் பின்னடைவுப் பணியிடங்களிலும், தற்போதைய காலியிடங்களிலும் சேர்த்து திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை 2 வாரங்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பொது பட்டியலில் சேர்க்காத விவகாரம் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வாளர் பட்டியல் ரத்து: புதிய பட்டியலை வெளியிட ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: