புனே – அரியானா பலப்பரீட்சை: புதிய சாம்பியன் யார் ?

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் பைனலில் புனேரி பல்தான் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தொடங்கிய நடப்பு தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த புனே, ஜெய்பூர் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. எலிமினேட்டர் சுற்று முடிவில் நடந்த அரையிறுதி ஆட்டங்களில் புனே அணி 37-21 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்சையும், அரியானா 31-27 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்பூரையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின.

இந்த நிலையில், ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெறும் பைனலில் புனேரி பல்தான் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. புனே அணி தொடர்ந்து 2வது முறையாகவும், அரியானா முதல் முறையாகவும் பைனலில் விளையாட உள்ளன. இரு அணிகளும் 14 லீக் ஆட்டங்களில் மோதியுள்ளதில்ம் புனே 8, அரியானா 5ல் வென்றுள்ளன (ஒரு போட்டி சரிசமன்).

நடப்பு தொடரில் 2 முறை மோதியதில், முதல் லீக் ஆட்டத்தில் அரியானா 44-39 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது லீக் ஆட்டத்தில் புனே 52-36 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்று சமநிலையில் உள்ளன. நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன்கள் எல்லாம் ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், இன்றைய பைனலில் வெற்றி பெறும் அணி புரோ கபடி தொடரின் புதிய சாம்பியனாக முடிசூடும். கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.

என்ன சொல்றாங்க கேப்டன்கள்?

* இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெயபூரை எதிர்க் கொள்ள வேண்டி இருந்தாலும் கவலைப் பட்டிருக்க மாட்டோம். எங்கள் வீரர்கள் இடையே ஒருங்கிணைப்பு சூழ்நிலையை புரிந்து விளையாடும் தன்மை ஆகியவை உள்ளன. அதனால் அரியானாவையும் எந்த தயக்கமும் இல்லாமல் இயல்பாக எதிர் கொள்வோம். – அஸ்லாம் இனாம்தார் (புனே)

* உற்சாகமாக இருக்கிறோம். பைனலில் புனேயின் எந்த ஒரு வீரரையும் இலக்காக கொண்டு விளையாடும் திட்டம் ஏதுமில்லை. மொத்த அணியையும் வெளியே உட்கார வைப்பது தான் எங்கள் ஒரே இலக்கு. – ஜெய்தீப் தஹியா (அரியானா)

The post புனே – அரியானா பலப்பரீட்சை: புதிய சாம்பியன் யார் ? appeared first on Dinakaran.

Related Stories: