மெல்ல மெல்ல திரும்புகிறது உடல் தகுதி; ஐபிஎல் டி20ல் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவாரா?: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்ப்பு

மும்பை: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்று விட்டது. இருப்பினும் கடைசி போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையும். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்களின் கவனம் தற்போது டி20 நோக்கி சென்றுவிட்டது. ஏனென்றால் ஐபிஎல் டி20 உலக கோப்பை என அடுத்த மூன்று மாதங்களுக்கு ரசிகர்களுக்கு திருவிழா தான்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என கங்கனம் கட்டி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா மாற்றப்பட்டது அந்த அணியில் பெரிய விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அது சூர்யகுமார் யாதவ் கையில் தான் இருக்கிறது. மும்பை அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ், கடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது காயம் அடைந்தார். அவரது காயம் பெரிய அளவில் இருந்ததால் அவர் குணமடைவதற்கு ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கடந்த 2 மாத காலமாக ஓய்வில் இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது தனது உடல் தகுதி குறித்து அப்டேட் வெளியிட்டு இருக்கிறார். அதில் சூர்யகுமார் யாதவ் குச்சியை வைத்து நடக்கும் நிலையில் தான் இருந்தார். ஆனால் மெல்ல மெல்ல தற்போது உடல் தகுதி கொஞ்சம் திரும்பி இருக்கிறது. இதனால் சின்ன சின்ன உடற்பயிற்சியை சூர்யகுமார் தொடங்கி இருக்கிறார். தற்போது தனது காலில் உள்ள தசைகள் வலுப்பெறுவதற்கான பயிற்சியில் சூர்யகுமார் யாதவ் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

மெல்லமாக நடப்பது, மெல்லமாக ஓடுவது என்ற பணியையும் அவர் செய்து வருகிறார். எனவே அவர் விரைவில் குணமடைந்து அணியில் இணையவேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்ப்பில் உள்ளது. இதுகுறித்து அவர், “தனது உடல் தகுதியை மீட்டு கொண்டுவரும் பணியில் தான், சரியான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்’’. சூர்யகுமார் யாதவை பார்க்கும்போது அவர் ஏப்ரல் மாதம் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என தெரிகிறது. இதனால் சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் முதல் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு குறைவாகதான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

The post மெல்ல மெல்ல திரும்புகிறது உடல் தகுதி; ஐபிஎல் டி20ல் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவாரா?: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: