கோடை வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்

திருத்துறைப்பூண்டி, பிப். 29: கோடை வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் உணவு முறைகள் குறித்து திருத்துறைப்பூண்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள் குறித்தும் , இயற்கை உணவுகளால் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் தெரிவித்திருப்பதாவது.

தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பருவ மாற்றமும், அதற்கேற்ப உடல் மாற்றங்களும் நிகழ்வது இயல்புதான். கோடை காலத்தில் இது போன்ற மாற்றங்கள் அதிகம் ஏற்படுகின்றன. வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் பல்வேறு உபாதைகள் உண்டாகின்றன. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒவ்வொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற வகையிலான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இதன் மூலம் நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும். இவற்றில் பெரும்பாலானவை உணவு முறைகளே. இத்துடன் நமது வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைச் செய்தால்போதும். பொதுவாகக் கோடை காலத்தில் சில நோய்கள் மிகவும் தீவிரமடையும். இவற்றை ஆயுர்வேத மருத்துவ முறைகள், சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும். கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் உடல் வலுவிழக்கும். இந்தத் தட்பவெப்பநிலை மாற்றம் உடலில் வாயு, பித்தம், கப அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

குளிர்காலத்தில் அதிகரித்த கபம், இப்போது உலர்ந்து போகும். அந்த இடத்தை வாதத் தோஷம் ஆக்கிரமிக்கும். கோடை காலத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பித்தத் தோஷம் அதிகரிக்கும். பொதுவாகப் பசியைத் தூண்டிச் செரிமானத்தைச் சீராக்குவதில் பித்தம் நேரடியாகத் தொடர்புடையது. கோடை காலத்தில் சீரான செரிமானமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். வெப்பநிலை அதிகரிக்கும்போது செரிமானச் சக்தி குறையும். இதனால் பல நேரங்களில் மந்தமாக இருக்கும். இதனாலேயே பித்தத்தைச் சமச்சீராக வைத்திருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஓரளவு உணவு, அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் நீரிழப்பு ஏற்படாமல் பராமரிக்கலாம்.

நாள் முழுவதும் அதிகத் தண்ணீர் அருந்துங்கள். அது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் சத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது. உடனடியாகத் தயாரிக்கப்படும் பழச்சாறுகளான தர்பூசணி, திராட்சை, பழங்களின் சாறுகளை ஐஸ் சேர்க்காமல் அருந்தலாம். இளநீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப் பொருமல் பிரச்சினையைச் சமாளிக்கலாம்.

காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, முட்டைகோஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம். இதேபோல நெய், பால், தயிர், மோர், புழுங்கல் அரிசி சாதம், சோள மாவு போன்றவையும் கோடைக்கேற்ற உணவு வகைகள்தான். மாப்பிள்ளை சம்பா , கருப்பு கவுனி கஞ்சியாகவும், நீராகாரமாவும். சிறுதானியங்கள் உணவையும் எளிதில் செரிமானம் கொடுக்கும் வகையில் எடுத்து கொள்ளலாம்.

கோடைகாலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதால், தலைவலி வரலாம். எண்ணெய் குளியல் எடுப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீர்படுவதுடன் உடலின் வெப்பமும் தணியும். இதன்மூலம் தலைவலி குணமாகும்.
பொதுவாகச் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், குளிர்ச்சி, லேசான காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாவது, அடிவயிறு மற்றும் அதைச் சுற்றிலும் லேசான வலி போன்றவை ஏற்படலாம். ஆயுர்வேத மருத்துவம், சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்குப் பித்தத் தோஷமே காரணம் என்றும், கோடை காலத்தில் அது அதிகமாக ஏற்படும் என்றும் கூறுகிறது.

உலர் திராட்சை, பேரீச்சம்பழங்களைச் சம அளவில் எடுத்துக்கொண்டு அவற்றைக் குளிரவைத்து, ஏலக்காய், வாழை இலை ஆகியவற்றை ஒரு புதிய மண் பானையில் போட்டுப் புளிக்க வைத்து சாப்பிடலாம் இது போன்ற இயற்கை முறையில் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முடியும் என்றார்.

The post கோடை வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் உணவு முறைகள் appeared first on Dinakaran.

Related Stories: