அம்மன் கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு கே.வி.குப்பம் அருகே மர்ம ஆசாமிகள் அட்டூழியம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள

கே.வி.குப்பம், பிப்.29: கே.வி.குப்பம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்குள்ள சுவாமி சிலைகளை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த அங்கராங்குப்பம் ஊராட்சி, மந்தைவெளி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நாகாலம்மன் கோயில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் துத்தித்தாங்கல், சுரங்குப்பம், சுரங்குப்பம் மேடு, அங்கராங்குப்பம், பல்லக்கொல்லை, ரவுத்தகுப்பம், ரகுநாதபுரம் உட்பட சுற்றுப்புற கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்ததும் அர்ச்சகர் வழக்கம்போல் கோயிலை பூட்டி விட்டு சென்றார். தொடர்ந்து, நேற்று காலை வந்து பார்த்தபோது கோயில் வளாகத்தில் வெளியே போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அனைவரும் உள்ளே சென்று பார்த்தபோது, மூலவர் அம்மன் சிலை, நவக்கிரக சிலைகள் மற்றும் சுவாமி சிலை ஆகியன உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. நள்ளிரவு கோயில் பூட்டு உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், கோயிலில் இருந்த உண்டியலை உடைக்கவில்லை. கடந்த வாரம் இக்கோயிலில் திருவிழா நடந்த நிலையில் பக்தர்கள் ஏராளமான காணிக்கை செலுத்தியிருந்தனர். அவை ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டது. இதற்கிடையில், மர்ம ஆசாமிகளை சுவாமி சிலைகளை மட்டுமே உடைத்து சேதப்படுத்தி விட்டு உண்டியலை அப்படியே விட்டு சென்றுள்ளதால் இவர்களது நோக்கம் திருடுவது இல்லை என்பது தெரியவருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பனமடங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post அம்மன் கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு கே.வி.குப்பம் அருகே மர்ம ஆசாமிகள் அட்டூழியம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள appeared first on Dinakaran.

Related Stories: