என்எல்சியில் பரபரப்பு வி.கே.டி சாலை ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து சப் கான்ட்ராக்டர்கள் முற்றுகை

நெய்வேலி, பிப். 28: விகேடி தேசிய நெடுஞ்சாலை பணிகள் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நடைபெற்று வருகிறது. இப்பணிகளை எடுத்த ஒப்பந்த நிறுவன அலுவலகம் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் அடுத்த கொள்ளுகாரன்குட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த ஒப்பந்த நிறுவனம் விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை உள்ள சாலை பணிகளை செய்து வருகிறது. இந்த ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்த சப் கான்ட்ராக்டர்களுக்கு பல லட்சங்கள் பாக்கி வைத்துள்ளதால் பாதிக்கப்பட்ட சப் கான்ட்ராக்டர்கள் நேற்று என்எல்சி ஆர்ச் கிட் எதிரில் நடைபெற்ற மேம்பாலப் பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சப் கான்ட்ராக்டர்கள் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக தாங்கள் செய்த நெடுஞ்சாலை பணி, கட்டுமான பணி, பொக்லைன் இயந்திரம், நான்கு சக்கர கார் வாடகை பாக்கி மற்றும் இந்நிறுவனத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கிய கடைக்காரருக்கும் பல லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் பலமுறை நிர்வாக ஒப்பந்த நிறுவன அதிகாரியிடம் எடுத்துக்கூறியும் அவர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தரவும், இந்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும் தாங்கள் நேரில் சென்று அலுவலகத்தில் பணம் கேட்டால் அடியாட்களை வைத்து தங்களை மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட சப் கான்ட்ராக்ட்காரர்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இதுகுறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

The post என்எல்சியில் பரபரப்பு வி.கே.டி சாலை ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து சப் கான்ட்ராக்டர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: