தொழில் வணிக உரிமத்தை 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க மாநகராட்சி ஆணையிட வேண்டும்: திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம்


சென்னை: திமுக வர்த்தகர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பாஜவின் உட்பிரிவு போல் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை செயல்படுவதை கண்டிக்கிறோம். தேர்தல் அதிகாரியே வாக்கு சீட்டில் கிறுக்கி, செல்லாது என கூறியவரை கண்டுபித்து ஆம்ஆத்மி, காங்கிரஸ் கூட்டணியே வென்றதாக உச்ச நீதிமன்றம் சொன்னபிறகும் குற்றவாளிகளை காப்பாற்றும் பாஜ அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடை, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்படும். பிறப்பால் அனைவரும் சமம் என்கிற திராவிட மாடலை இன்று இந்தியாவே ஏற்றுக் கொண்ட சூழலில், ஏற்றுக் கொண்ட இந்திய தலைவர்களுக்கும், திராவிட மாடல் தந்த முதல்வருக்கும் நன்றி. தமிழ்நாடு முழுவதும் கடை நடத்தி வந்த வியாபாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது ஆதரவு கரம் நீட்டி, துயர் நீக்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி.

சென்னை மாநகராட்சியில் தொழில் வணிக உரிமம் 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ளலாம் என ஆணையிட வேண்டுகிறோம். இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகமாகி 6 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பல்வேறு குழப்பங்கள், குளறுபடிகள் தொடர்ந்து நீடிக்கிறது. வருமானவரி தவிர மற்ற வரிகள் மீண்டும் அந்தந்த மாநில அரசுகளே மாநில மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முடிவுகளை எடுத்துக் கொள்ள ஜிஎஸ்டியை நாமே விதித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும். கிளம்பாக்கத்தில் உள்ள அரசு பேருந்து நிலையத்துக்கு தலைவர் பெயரை சூட்டிய முதல்வருக்கு நன்றி. சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்திய கவர்னரை கண்டிக்கிறோம். அரசியலைப்பு சட்டம் வகுத்த வழியின்படி நடக்காமல் எதேச்சிகாதிகாரத்துடன் செயல்பட்டு வரும் கவர்னர் ரவியை கண்டிப்பதுடன், திரும்பிப்போ என்கிற கோஷத்தை தருகிறோம்.  சேலத்தில் 6 லட்சம் தோழர்களுடன் அணி திரட்டிய இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.

தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றிட ஸ்பெயின் நாட்டிற்கு 10 நாட்களாக பயணம் செய்து முதலீடுகளை ஈர்த்து வந்த தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாநில இணை செயலாளர் திண்டுக்கல் ஜெயன், வரகூர் பெரியசாமி, சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துசெல்வி, நாகர்கோவில் தாமரை பாரதி பாண்டி செல்வன் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கோவை மாரிசெல்வன், சென்னை மேற்கு விஜயராஜ், சென்னை தென் மேற்கு மயிலை பாலு, சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் லையன் வி.தியாகராஜன், கோவை சந்தீப் ராஜா முன்னிலை வகித்தனர். மேலும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

The post தொழில் வணிக உரிமத்தை 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க மாநகராட்சி ஆணையிட வேண்டும்: திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: