மாநில மற்றும் கல்வி உரிமையை மீட்டெடுக்க 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 25,000 பேருக்கு சமையல் உபகரணங்கள், 5 கிலோ அரிசி, மாளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சென்னை கிழக்கு மாவட்டத்தில்தான் தமிழ்நாட்டிலே முதல் முறையாக பாக முகவர் கூட்டம் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தொடர் 100 நிகழ்ச்சிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நடத்தினார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு 71 நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதில் 50 நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயன்தரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.  திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று கேட்பர்வர்க்களுக்கு சான்று இந்த நிகழ்ச்சி.

இப்படி எல்லோருக்கும் எல்லாம் அனைவரும் சமம் என்பதை தான் திராவிட மாடல் ஆட்சி உணர்த்துகிறது. இந்த தொகுதி மக்களுக்கு தான் யார் அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று தேர்தலுக்கு முன்பே தெரியும். இதுவரை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.
நிதி பகிர்வின்படி நாம் தரும் ஒரு ரூபாயில் 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள். ஒரே ஒரு பைசா கூட வெள்ள நிவாரணத்துக்கு தரவில்லை. இனி பிரதமரை திரு.28 பைசா மோடி என்று கூறலாம். இந்த 7 ஆண்டுகளில் 21 குழந்தைகள் நீட் தேர்வால் இறந்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது கூட தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. அதன் பிறகு இந்த அடிமை கூட்டம் ஒன்றிய அரசுக்கு பாயந்து நீட் தேர்வை கொண்டு வந்து அனிதா முதல் ஜெகதீசன் வரை உயிரழக்க காரணமாக இருந்தனர். அதிமுகவில் இருந்து பாஜவிற்கு 2 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜவில் இருந்து 2 சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுகவிற்கும் வருகிறார்கள் என்பதே ப்ரேக்கிங் செய்தியாக உள்ளது. நீங்கள் இருவருமே ஒன்று தானே. பிறகு ஏன் மாறி மாறி சேர வேண்டும்.

நீங்கள் இந்த 3 ஆண்டு அரசின் சாதனைகளை கொண்டு செல்ல பிரச்சார பீரங்கியாக செயல்பட வேண்டும். குறிப்பாக 4 திட்டங்களை எடுத்துக் கூறுங்கள். நமது அரசின் புதுமை பெண் திட்டம், இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், காலை சிற்றுண்டி போன்றவற்றின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். நாம் நினைக்கும் அரசு அமைந்தால் தான் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட மாநில உரிமை, கல்வி உரிமை எல்லாம் மீட்டெடுக்க முடியும். நமது முதல்வர் யாரை கை காட்டுகிறார்களோ அவரே ஒன்றிய பிரதமராவார் அதற்கு 40க்கு 40 நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்.பி., பேசியதாவது: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 4 முறை வந்துள்ளார். தற்போது கூட பல்லடம் வந்துள்ளார். ஆனால் மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டபோது எட்டி பார்த்தாரா இல்லை. மோடி, தமிழ்நாட்டிற்கு இதுவரை என்ன செய்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. ஆனால் வாயில் வட சுடுவார். அதேபோல நிர்மலா சீதாராமனும் வாயில் வட சுடுவார். இவர்கள் எல்லாம் வெறும் வாய் பேச்சுதான். இவர்கள், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு கூட தமிழ்நாட்டிற்கு இழப்பீடு தரவில்லை.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு நாமம் போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் முரளி, ராஜசேகர், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பரிமளம், மாவட்ட துணை செயலாளர் தேவசவகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ் வழக்கறிஞர் துரைக்கண்ணு, உதயசங்கர், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணை அமைப்பாளர் ஜாவித், துறைமுக தொகுதி பொறுப்பாளர் பிரபு, வட்ட செயலாளர்கள் கதிரவன் உள்ளிட்ட திமுக பாக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மாநில மற்றும் கல்வி உரிமையை மீட்டெடுக்க 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: