தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில் ₹32 லட்சத்தில் அங்கன்வாடி ரேஷன் கடை கட்டிட பணி:எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்துக்குட்பட்ட புது பெருங்களத்தூர், என்ஜிஓ காலனி, 2வது தெருவில் 30 குழந்தைகளுடன் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்திருந்த காரணத்தால் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வந்தது. எனவே பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை அப்புறப்படுத்தி புதிதாக மையம் கட்டித் தர வேண்டும். அதே பகுதியில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்பேரில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹32 லட்சம் ஒதுக்கி சம்பந்தப்பட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் புதிய ரேஷன் கடை ஆகியவை அமைத்து தரப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்து இருந்தார். இந்நிலையில், புது பெருங்களத்தூர் என்ஜிஓ காலனி, 2வது தெருவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் புதிய ரேஷன் கடை அமைப்பற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது கட்டுமானப் பணி தரமாக இருக்க வேண்டும், குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரை எஸ்.ஆர்.ராஜா உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் மண்டல செயற்பொறியாளர் தங்கதுரை, உதவி பொறியாளர் வெங்கிடேஷன், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், மாமன்ற உறுப்பினர் புகழேந்தி, மதுமிதா, சிட்லபாக்கம் சுரேஷ், வட்டச் செயலாளர் ஜெபதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில் ₹32 லட்சத்தில் அங்கன்வாடி ரேஷன் கடை கட்டிட பணி:எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: