சிசோடியா சிறைக்கு சென்று ஓராண்டு நிறைவு: மகாத்மா காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் அஞ்சலி

* சட்டப்பேரவையில் எம்எல்ஏ.க்கள் எழுந்து நின்று சல்யூட்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப்ரவரி 26ம் தேதி கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிபிஐ அவரை கைது செய்து சிறையில் அடைத்து, நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு, சிசோடியாவை கவுரப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி சார்பில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முதல்வர் கெஜ்ரிவால் நேற்று காலை ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், அமைச்சர்களுடன் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘கடந்தாண்டு, இதே நாளில் எங்கள் அரசில் மிகப்பெரிய பெரிய நிர்வாக திறமையுடன் செயல்பட்ட கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவை ஒன்றிய அரசு பொய் வழக்கில் கைது செய்தது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கல்வியின் தரத்தை சிசோடியா மேம்படுத்தி, 75 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால், அவரை போன்ற தலைவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர். அவர் மட்டும் பாஜ.வில் சேர்ந்திருந்தால், அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு இருக்கும். ஆனால், உண்மையின் பாதையை விட்டு விலகக் கூடாது என்று அவர் முடிவு எடுத்தார்,’’ என்றார்.

பின்னர், சட்டப்பேரவைக்கு அவர் சென்றார். டெல்லி சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், சிசோடியாவை பற்றியும், கல்வி, சுகாதாரம் மற்றும் மின்சாரம் ஆகிய 3 துறைகளில் தனது அரசு செய்துள்ள சாதனைகள் குறித்தும் கெஜ்ரிவால் பேசினார். அவர் தனது பேச்சை தொடங்கும் முன்பாக, அனைவரும் எழுந்து நின்று சிசோடியாவுக்கு மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று சிசோடியாவுக்கு மரியாதை செலுத்தினர்.

The post சிசோடியா சிறைக்கு சென்று ஓராண்டு நிறைவு: மகாத்மா காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: