பதினோறாம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு தெப்போற்சவம் நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு தெப்பத்தில் வலம் வரும் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர்க்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனைகள் காட்டப்பட்டு கோயிலில் இருந்து புறப்பட்டு சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு புதுப்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவத்தில் இறங்கிய சுவாமிகள் தெப்பக்குள கரையோரத்தை 3 முறையும், மையத்தை 3 முறையும் வலம் வந்தனர். காலை 5.30 மணியளவில் தெப்பக்குளத்திலிருந்து கரையேறிய சுவாமிகள் வீதி உலா நடைபெற்று கோயிலை வந்தடைந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 26ம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து 27ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகி, மார்ச் 7ம் தேதி விடையாற்றி உற்சவ நிறைவு நிகழ்ச்சியுடன் மாசிமக பெருவிழா நிறைவடைகிறது.
The post விருத்தாசலத்தில் மாசிமக விழா அதிகாலையில் தெப்பல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.