தெப்பக்காடு பாலப்பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை

கூடலூர் : கூடலூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையில் தெப்பக்காடு பகுதி வழியாக ஓடும் மாயாற்றின் மீது அமைக்கப்பட்ட நூற்றாண்டு பழமையான பாலம் கடந்த இரு வருடங்களுக்கு முன் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த சாலை நடந்த போக்குவரத்து தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் மாயாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் வாகன போக்குவரத்து தடைபட்டும் வருகிறது.இதன் காரணமாக புதிய பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்,பயணிகள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் பாலத்தின் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.பணிகளும் மிகவும் தாமதமாகவே நடைபெற்று வருகிறது. கடந்த மழைக் காலத்துக்கு முன்னதாகவே பாலப்பணிகள் நிறைவு பெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வருட மழைக்காலம் துவங்க உள்ளதால் அதற்கு முன்பாக வாகன போக்குவரத்து நடைபெறும் வகையில் பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கார்குடி தெப்பக்காடு இடையே இரண்டு இடங்களில் பாலப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

The post தெப்பக்காடு பாலப்பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: