* ஐ.டி. உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற Umagine TN 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதலில் பாராட்டுகிறேன். நமது ஆட்சியில் முதல் 2 ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச்சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். நான் அவரை ஐ.டி.துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம் ஐ.டி. துறையிலேயும், நிதித்துறை போல மாற்றங்கள் தேவைப்பட்டது. அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும். மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றவேண்டும் என்பது தான் அது. அதற்கான முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்.
எல்காட்டில் அனுமதி வழிமுறைகளை மேம்படுத்தியதால், 5ஜி அலைக்கற்றை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்தியிருக்கிறோம். நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த தமிழ்நாடு ஃபைபர்நெட் அமைப்பை விரைவுபடுத்தியிருக்கிறோம். நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஐசிடி வழியாக நடத்தப்படுகின்ற பயிற்சித் திட்டங்களை அதிகரித்திருக்கிறோம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக 36 துறைகளின் 751 திட்டங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 ஆயிரத்து 292 இ-சேவை மையங்களில், 25 ஆயிரத்து 726 மையங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் ஆயிரம் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2021-22ம் ஆண்டுகளில், சென்னையில் பணியாளர்களுடைய எண்ணிக்கை 40% வரைக்கும் அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி கவுன்சில் மதிப்பிட்டிருக்கிறது. கோவையிலேயும் முன்பு எப்போதையும்விட அலுவலகங்கள் அதிகமாக திறக்கப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஐ.டி. துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டை உலகின் மனிதவளத் தலைநகரமாக மாற்றுவோம். தகவல் தொழில்நுட்பத் துறையினர் தேடிவரும் நகரமாக ஆக்குவோம். உலக நாடுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் உருவாக உழைப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
The post உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்: 750 திட்டங்கள் டிஜிட்டல்மயமாக்கல் தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.