சிவகங்கை மருத்துவமனை அருகே மருத்துவ கழிவுகள் எரிப்பதால் சுகாதாரக்கேடு

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் உள்ள கண்மாயில் தேங்கும் கழிவுநீர் மற்றும் மருத்துவ கழிவுகள், குப்பைகளால் சுகாதாரக்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக் கல்லூரியும் இயங்க தொடங்கியது. ஏற்கனவே நேரு பஜார் சாலையில் அம்பேத்கர் சிலை அருகில் இருந்த தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகு மன்னர் துரைச்சிங்கம் அரசு கல்லூரி பின்புற பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

உள்நோயாளிகள் பிரிவில் 500படுக்கைகள் உள்ளன. வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு பரிசோதனைக்காக வருகின்றனர். இம்மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகள், பாலித்தீன் பைகள், ஊசி உள்ளிட்ட வீணாகும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகள் மருத்துவமனையின் பின்புறம், மதுரை, மானாமதுரை பைபாஸ் இணைப்புச்சாலை அருகே கொட்டப்படுகிறது.

மருத்துவக் கழிவுகள் இதே இடத்திலேயே கொட்டப்பட்டு வரும் நிலையில் அவற்றை அகற்ற போதிய நடவடிக்கையும் இல்லை. மேலும் நகராட்சி குப்பைகளும் இப்பகுதியில் கொட்டப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வெளியாகும் கழிவுநீர் மருத்துவமனையின் பின்புறம் உள்ள கண்மாயில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லை. மருத்துவ கழிவுகள் மற்றும், கழிவு நீரால் கடுமையான சுகாதாரக்கேடு நிலவுகிறது. கழிவுகளை அகற்றாமல் தீப்பற்றவைப்பதால் பல நாட்கள் எரிந்து கொண்டே சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மானாமதுரை பைபாஸ் சாலையில் வாகனங்கள் செல்வதே தெரியாத அளவிற்கு உள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது: மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நகராட்சி குப்பைகளும் கொட்டப்படுகிறது. அவ்வப்போது தீப்பிடித்து எரியும் இந்த குப்பைகளால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், இப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகிறோம். இதுபோல் திறந்தவெளியில் கொட்டுவது மேலும் நோய் பரப்பவே செய்யும். சில மாதங்களுக்கு ஒரு முறைகூட அகற்றாமல் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதால் கடுமையான சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். கழிவுநீர் செல்லவும், கழிவுகள், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post சிவகங்கை மருத்துவமனை அருகே மருத்துவ கழிவுகள் எரிப்பதால் சுகாதாரக்கேடு appeared first on Dinakaran.

Related Stories: