கிராமத்தில் வசிப்பவர்களைத் தங்கள் அடிமைகளாகக் கருதுவதா? கட்டப்பஞ்சாயத்து, ஊரை விட்டு ஒதுக்குவோர் மீது சட்ட நடவடிக்கை: தென்மண்டல ஐஜிக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டம், ராயகிரியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் மதிவாணன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம் ராயகிரியில் கடந்தாண்டு மார்ச்சில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அங்கிருந்த சிலர், ‘எங்களின் பகுதிக்குள் எப்படி வரலாம்’ எனக்கூறி சாதியை சொல்லி திட்டினர். பின்னர் எங்களை வெளியேற்றினர். என்னை அழைத்துச் சென்ற என் நண்பர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு நிர்பந்தம் செய்துள்ளனர். பின்னர் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். புகாரின்பேரில் சிவகிரி போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப், ‘அரசியலமைப்பு சட்டத்தின்படி கலெக்டர் மற்றும் காவல்துறை மூலமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. இப்படி இருக்கும்போது, ​​கிராமங்களில் உள்ள ஒரு சிலர் தங்களைத் தலைவர்கள் என்று அழைத்துக் கொள்வதும், சட்டப்பூர்வ முறைகளால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், கிராமத்தில் வசிப்பவர்களைத் தங்கள் அடிமைகளாகக் கருதுவதும், வாய்மொழி உத்தரவு மூலம் கிராமத்திலிருந்து வெளியேற்றி அபராதம் விதிப்பதும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளான பின்னரும், குடிமக்களை அடிமையைப் போல நடத்துவது, ஒதுக்கி வைப்பது, கடைகளில் பொருட்கள் வழங்க மறுப்பது போன்ற தனி நபர்கள் நக்சலைட்கள் போல தனி மாநில அரசுக்கு இணையான அரசாங்கத்தை நடத்துவது தவறு. தனிமனித சுதந்திரத்தை பாதிக்கின்ற இதுபோன்ற செயல் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம், தனிமனித சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. நீதிமன்றம் இப்பிரச்னையில் கவனம் செலுத்தாவிட்டால், வகுப்புவாத மற்றும் சாதி மோதல்களுக்கு வழிவகுத்து, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதன் விளைவாக உயிர் இழப்பு, சொத்து இழப்பு ஆகியவை ஏற்பட்டு மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். உலகளவில் நாட்டின் மதிப்பு குறையும். இந்த வழக்கை பொறுத்தவரை தென்மண்டல ஐஜி, டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியை நியமனம் செய்து இரு வழக்குகளையும் தனது நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபடக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

The post கிராமத்தில் வசிப்பவர்களைத் தங்கள் அடிமைகளாகக் கருதுவதா? கட்டப்பஞ்சாயத்து, ஊரை விட்டு ஒதுக்குவோர் மீது சட்ட நடவடிக்கை: தென்மண்டல ஐஜிக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: