கலைஞர் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26ம் தேதி திறப்பு : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : பிப்.26-ம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில், கேள்வி பதில் நேரத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,”நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவன் கலைஞர். கலைஞரின் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரை உருவாக்கிய, நமது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடமும் கலைஞரின் நினைவிடமும் வருகிற பிப்ரவரி 26ம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். ஆகவே நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி, தோழமை கட்சி உள்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வர வேண்டும் என்று சபாநாயகர் மூலம் கேட்டுக்கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

கலைஞர் நினைவிடம்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மெரீனாவில் கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க நிதி ஒதுக்கி முதல்வர் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். பொதுப் பணித் துறையால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து, பிப்ரவரி 26ம் தேதி கலைஞர் நினைவிடம் திறந்து வைக்கப்பட உள்ளது.

The post கலைஞர் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26ம் தேதி திறப்பு : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: