10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரூ.6000 கோடி மட்டுமே திமுக ஆட்சியில் இந்த ஆண்டு மட்டுமே ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயம்: செல்லூர் ராஜூக்கு, அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி

பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை மேற்கு செல்லூர் ராஜூ(அதிமுக) பேசத் தொடங்கியதும், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயரை குறிப்பிட்டு உரையை தொடங்கினார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு, ‘‘எல்லோரது பெயரையும் நீங்கள் சொல்லிக் கொண்டு வந்தீர்கள். நம்முடைய மண்ணிலிருந்து இப்போது புதிதாக வந்திருக்கக்கூடிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரையும் குறிப்பிட்டு ஒரு வார்த்தையைச் சொல்லியிருக்கலாம். அதை நீங்கள் விட்டுவிட்டீர்களே’’ என்றார். அதற்கு செல்லூர் ராஜூ, ‘‘அது எங்கள் தம்பி. நாங்கள் சொன்னாலும் எங்கள் இதயத்தில் இடமிருக்கிறது. சொல்லின் செல்வன் எந்தக் காரியத்தைக் கொடுத்தாலும் சுறுசுறுப்பாக தேனியைப்போல் பணியாற்றக்கூடிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்’’ என்றார். (இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.)

செல்லூர் ராஜூ: 30 ஆண்டு காலம் நாங்கள் ஆட்சியிலே இருந்திருக்கிறோம். அதனால் எங்கள் தலைவர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை மட்டும் முதலில் கோடிட்டு காண்பித்துவிட்டு பிறகு, நான் நிதிநிலை அறிக்கைக்குள் வருகிறேன்.(அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கூறினார்). 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில் ஒரு கோடியே 6 லட்சத்து 98,452 விவசாயிகளுக்கு 60,646 கோடி ரூபாய் பயிர்க்கடன் கொடுத்துள்ளோம்.

அமைச்சர் பெரிய கருப்பன்: 2011-2021 உங்களுடைய 10 ஆண்டு ஆட்சிக்காலம் வரை சராசரியாக ரூ.6,000 கோடி தான் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், திமுக அரசு, முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, முதற்கட்டமாக 10 ஆயிரம் கோடியைத் தாண்டியது இந்த அரசில் தான். கடந்த ஆண்டு 12,600 கோடி. இந்த ஆண்டு ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலக்கில் இன்று வரை ரூ.14 ஆயிரம் கோடி எட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் உரக்க குரல் கொடுத்தாலும், இந்த வரலாற்றுச் சாதனையை மூடி மறைத்துவிட முடியாது.

அமைச்சர் தங்கம் தென்னரசு: கொரோனா காலத்தில் அள்ளிக் கொடுத்ததாகச் சொன்னார்கள். உண்மையிலேயே கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரத்தை அள்ளிக் கொடுத்த வள்ளல் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அவை முன்னவர் துரைமுருகன்: உறுப்பினர்கள் யாருக்கும் 10 நிமிடங்களுக்கு மேல் பேசுவதற்கு அனுமதி கிடையாது. செல்லூர் ராஜூ நம்மைப்பற்றி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால், அவர்களுடைய ஆட்சியில் செய்தவற்றையெல்லாம் சொல்லிட்டு, 10 நிமிடங்களில் பேச்சை முடிக்கப் பார்க்கிறார்.(சிரிப்பலை)

செல்லூர் ராஜூ: நாங்கள் கூட்டுறவு வங்கிகளில் நிதிநிலையைப் பெருக்கி, மாவட்ட வங்கிகள் அனைத்தையும் ஆன்லைன் வர்த்தகத்திற்குக் கொண்டு வந்தது, டெபாசிட்டைப் பெருக்கியதால் தான், தற்போது உங்களால் பயிர்க் கடன் கொடுக்க முடிகிறது.
அமைச்சர் பெரியகருப்பன்: அவர் குறிப்பிடுவதைப் போன்று, டெபாசிட்டை அவர்கள் அதிகமாக வாங்கி வைத்திருந்தார்களேயானால், அந்த நேரத்திலேயே அவர்கள் கொடுத்திருக்க வேண்டியதுதானே. அவர்களுடைய 10 ஆண்டு கால சராசரியாக ரூ.6 ஆயிரம் கோடி தான் இருந்திருக்கிறது. ஆனால், நாங்கள் தற்போது ரூ.13 ஆயிரம் கோடியை தாண்டி, ரூ.16,500 கோடி என்ற இலக்கை நோக்கிச் செல்கிறோம் என்றால், இது சாதனையா? அது சாதனையா?.

* பட்ஜெட்டில் சரக்கும் மிடுக்கு; உருவாக்கிய முதல்வரும் மிடுக்கு
விவாத்தின் போது, செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘நிதியமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்கள் பேசியது அழகு, உங்கள் தமிழ் அழகு, ஒரு பேராசிரியருக்குரிய இலக்கணம். அப்படியிருந்தது. ஆனால், எல்லாமே இருந்தும், சரக்கு இல்லையே, சரக்கு இருந்தால் தானே நன்றாக இருக்கும்” என்றார். அதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு,‘‘ ‘சரக்கு மிடுக்கா செட்டியார் மிடுக்கா’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பட்ஜெட்டில் சரக்கும் மிடுக்கு. அந்த பட்ஜெட்டை உருவாக்கிய முதல்வரும் மிடுக்கு’’ என்றார்.

The post 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரூ.6000 கோடி மட்டுமே திமுக ஆட்சியில் இந்த ஆண்டு மட்டுமே ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயம்: செல்லூர் ராஜூக்கு, அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: