இளைஞர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகள் 15 பேர் காயம் ஒடுகத்தூர் அருகே மாடு விடும் விழா

ஒடுகத்தூர், பிப்.20: ஒடுகத்தூர் அடுத்த சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் நேற்று நடந்த மாடு விடும் விழாவில் இளைஞர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தொடங்கியதில் இருந்தே பல்வேறு கிராமங்களில் மாடு விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவானது வருடத்தின் முதல் மாதமான ஜனவரி தொங்கி தொடர்ந்து ஏப்ரல் மாதம் இறுதி வரை நடைபெறும். தற்போது, மாடு விடும் விழாவிற்கு அரசு பல்வேறு நிபந்தகளை விதித்துள்ளது. இதனை முறையாக கடைபிடித்தால் மட்டுமே மாடு விடும் விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் நேற்று மாடு விடும் விழா நடைபெற்றது. ஊர் நாட்டாண்மை ரங்கசாமி, கனாச்சாரியார் பாலாஜி, ஓங்கபாடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் கண்ணன் ஆகியோர் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காளைகள் ஓடும் ஓடுதளம் சீரமைத்து இருந்தனர். காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த மாடு விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று இருந்தன. மேலும் விழாவை காண ஒடுகத்தூர், அணைக்கட்டு, குருவராஜபாளையம், அகரம், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக காளைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதும் அவை இளைஞர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து புழுதி பறக்க ஓடியது. அப்போது, வீதியில் இருந்த இளைஞர்களை மண்ணை கவ்வ வைத்து ஓடிய காளைகள் முட்டியதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், வாடி வாசலில் இருந்து குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு ₹76 ஆயிரம், 2வது பரிசு ₹60 ஆயிரம், 3வது பரிசு ₹45 ஆயிரம் என மொத்தம் 76 பரிசுகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. காலை தொடங்கிய மாடு விடும் விழா மதியம் 2 மணி வரை தொடந்து நடைபெற்றது.

The post இளைஞர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகள் 15 பேர் காயம் ஒடுகத்தூர் அருகே மாடு விடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: